மலையகத்தில் பல்கலைக்கழகம் என்பது இதுவரை பகல் கனவாகவே உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். எனவே மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படாமையால் மாணவர்களும், பெற்றோரும் பல்வேறு அசௌகரியங்களை சந்தித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
நேற்று (07) பல்கலைக்கழக அனுமதி சம்பந்தமான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய போதே அரவிந்தகுமார் இதனை கூறினார்.
"இளைஞர், யுவதிகளுக்கான பட்டப்படிப்பு காலம் தொடர்ந்தும் நீடிக்கப்படுவதால் அவர்களின் கற்றலுக்கான காலம் வீணடிக்கப்படுகின்றது. இந்த நிலைமை நாட்டுக்கு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தாது. ஆகவே இதனை குறைப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மலையகத்தை பொறுத்தவரை இந்த பிரச்சினை வித்தியாசமானது. அதாவது பிள்ளைகளை கற்பிப்பதற்கு பெற்றோர் அதிக சிரத்தை எடுக்கின்றனர். அதனைவிட வளப்பற்றாக்குறை, ஆசிரியர்களின் குறைப்பாடு, ஆசிரியர் உதவியாளர்களின் நியமனத்தில் உள்ள இழுபறி என பல பிரச்சினைகள் உள்ளன.
குறிப்பாக பதுளை மாவட்டத்தில் தொழில் இல்லாத பிரச்சினை, பெற்றோரின் வருமான பிரச்சினை இவ்வாறான பல பிரச்சினைகள் மாணவர்களின் கல்வியில் பெருந்தாக்கத்தை செலுத்துகின்றன. பதுளை மாவட்டத்தில் தமிழ் மாணவர்கள் சாதாரண தரத்தில் சிறப்பான பெறுபேறுகளை பெற்றாலும் மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம் ஆகிய பிரிவுகளில் கல்வியை தொடர்ந்து சிறந்த பெறுNபுறுகளை பெற முடியாமல் உள்ளது. இதற்கு ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்.
ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொன்னாலும் கூட பதுளையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு நுவரெலியா மாவட்டத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றது. இது ஒரு அடிப்படை மனித உரிமை மீறலுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகும். ஆகவே கல்வியமைச்சர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
அதேபோல் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று இல்லாமை பாறிய குறையாக உள்ளது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கங்களும் இது குறித்த உறுதி மொழி வழங்கப்பட்டாலும். இதுவரை மலையகத்தில் பல்கலைக்கழகம் என்பது பகல் கனவாகவே உள்ளது.
தற்போதைய நிலையில் வேறு மாகாண பல்கலைகழகங்களுக்கு பிள்ளைகளை அனுப்பி வைப்பதில் பெற்றோர் பாரிய பொருளாதார சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். அதேபோல் வேறு பல்கலைக்கழகங்களில் மலையக மாணவர்கள் கல்வி பயின்றாலும் அவர்களின் இடைவிலகல் அதிகம். ஆகவே இவ்வாறான நிலைமையை நிவர்த்திக்க அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டும்´ என்றார்.
No comments:
Post a Comment