(நா.தனுஜா)
சுதந்திர வர்த்தக வலயத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு அனுமதி வழங்குவதை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் தாமதித்து வருவதாக சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொதுச் சேவைகள் தொழிலாளர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
எனவே இவ்விடயத்தில் உடனடியாகத் தலையீடு செய்து அவர்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொடுப்பதன் ஊடாக அப்பகுதி ஊழியர்களிடமிருந்து நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் குறித்து வலியுறுத்தியிருக்கிறது.
இது குறித்து சங்கத்தின் இணைச்செயலாளர் அன்ரன் மார்கஸ், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறார். அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி 'கொவிட்-19 வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்' என்று தலைப்பிடப்பட்ட கடிதத்தின் ஊடாக உங்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தோம். அதன் தொடர்ச்சியாகவே இக்கடிதத்தை அனுப்பி வைக்கிறோம்.
இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும் தமது ஊழியர்களை உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவிடுமாறும், அவ்வாறு பரிசோதனைகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்படுத்துவது வைரஸ் மேலும் பரவலடைவதற்கே காரணமாக அமையும் என்றும் முன்னர் அனுப்பி வைத்த கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதேவேளை கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய உற்பத்தியாளர்கள் சங்கம், சுதந்திர வர்த்தக வலயத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு முன்வந்திருப்பதாகவும் சுகாதார அமைச்சு அதற்கான அனுமதியை வழங்கும் வரையில் காத்திருப்பதாகவும் எம்மால் அறிய முடிகின்றது. எனினும் சுகாதார அமைச்சு இதனை உடனடியாக ஏற்றுக் கொள்ளாமல், அனுமதி வழங்கலை ஏன் தாமதிக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.
தற்போது நாளாந்தம் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இதனால் சுகாதாரப் பிரிவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது. இவ்வாறான பின்னணியில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அனைவரையும் உடனடியாக பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதென்பது, ஊழியர்களுக்கிடையில் மாத்திரமன்றி அவர்களின் இருப்பிடங்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பேற்படுத்தும்.
எனவே கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்பொன்றை நிறுவுவதற்கு உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு அனுமதியளிப்பது அனைவருக்கும் நன்மையளிப்பதாகவே அமையும்.
எனவே இதற்கான அனுமதியை வழங்குவதிலும் சுதந்திர வர்த்தக வலயத்தில் ஊழியர்கள் தங்கியிருக்கும் இடங்கள் அனைத்தையும் தொற்று நீக்குவதற்கான அறிவுறுத்தலை முதலீட்டுச் சபைக்கு வழங்குவதிலும் நீங்கள் தலையீடு செய்து, சாதகமான தீர்வைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment