மன்னார் மாவட்டத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் இடை நிறுத்தம் - பொதுமக்களுக்கான சேவைகளும் இடைநிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Friday, October 9, 2020

மன்னார் மாவட்டத்தில் அனைத்து பேரூந்து சேவைகளும் இடை நிறுத்தம் - பொதுமக்களுக்கான சேவைகளும் இடைநிறுத்தம்

மன்னார் நிருபர்

வெண்ணப்புவ பகுதியில் இருந்து மன்னார் பட்டித்தோட்டம் பகுதிக்கு வந்து கட்டிட பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சீ.பி.ஆர் பரிசோதனையின் போது குறித்த நபர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அணைத்து தனியார், அரச பேரூந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது என மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (9) காலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வெண்ணப்புவ பகுதியில் இருந்து மன்னார் பட்டித்தோட்டம் பகுதிக்கு வந்து கட்டிட பணியில் ஈடுபட்ட நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சீ.பி.ஆர். பரிசோதனையின் போது குறித்த நபர் கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக அந்த பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பிரதேசத்தை அன்டிய பகுதியிலும் பீ.சி.ஆர். பிரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் இருந்து செல்லுகின்ற அணைத்து தனியார், அரச பேரூந்து சேவைகளும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த பிரதேசங்களில் இயங்குகின்ற அலுவலகங்களில் குறைந்த அளவு பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் பொதுமக்களுக்கான சேவைகள் இன்றைய தினமும், எதிர்வரும் சில தினங்களுக்கும் இடை நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

குறிப்பாக மக்கள் தமது தனிப்பட்ட வாகனங்களில் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்வது நல்லது. மக்கள் பின் பற்றி வந்த சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும்.

ஆளுனரின் பணிப்புரைக்கு அமைவாகவே போக்கு வரத்து இடைநிறுத்தம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளோம். பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் வேலை செய்த சுமார் 45 பேருக்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளது. குறித்த பரிசோதனைகளின் போது கூடுதலான அளவிற்கு தொற்று உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் முற்று முழுதாக மாவட்டம் முடக்கப்பட வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் ஹம்பகா, வெண்ணப்புவ போன்ற பகுதிகளில் இருந்து பணிக்காக வந்துள்ளவர்களை பதிவுகளை மோற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

சுகாதார அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு பீ.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள கோரியுள்ளதோடு மக்களுக்கு பொதுவான அறிவித்தலையும் வழங்க கோரியுள்ளோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment