20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரியுள்ளதாக நிசாம் காரியப்பர் தெரிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, October 24, 2020

20 க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரியுள்ளதாக நிசாம் காரியப்பர் தெரிவிப்பு

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்தின் நிலைப்பாட்டுக்கு எதிராக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு வாக்களித்துள்ளமையினால், அது தொடர்பில் உறுப்பினர்களிடம் விளக்கம் கோரியுள்ளதாக, அக்கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தை தொடர்ந்து ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து செயலாளரின் பிரசன்னத்துடன் செயற்பாடுகளை வினவி அது தொடர்பில் கலந்தலோசிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காஸிம், எம்.எஸ்.தௌபீக், ஹாபிஸ் நசீர் அஹ்மட் ஆகியோர் கலந்துகொண்டிருந்ததாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பில் நடந்த நீண்ட கலந்துரையாடலின் பின்னர், மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதற்காக கட்சியின் அதியுயர்பீட உறுப்பினர்கள் முன்னிலையில் அவர்களது நிலைப்பாட்டிற்கான விளக்கத்தை அளிக்குமாறு கோரப்பட்டது.

இதற்காக கட்சியின் அதியுயர்பீடக் கூட்டத்தை இயன்றவரை விரைவில் கூட்டுமாறும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.

அதன் பின்னர் கட்சியின் உயர் பீடம் இது தொடர்பில் கூடி ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீர்மானங்களை எடுக்கும் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment