மக்களின் கேள்வி கனைகளிலிருந்து அரசாங்கத்தால் தப்பிக்க இயலாது - ரணில் ஆவேசம்! - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

மக்களின் கேள்வி கனைகளிலிருந்து அரசாங்கத்தால் தப்பிக்க இயலாது - ரணில் ஆவேசம்!

(எம்.மனோசித்ரா) 

பெரும்பான்மை காணப்படுகிறது என்பதற்காக 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக தன்மையை அழிப்பதற்கோ குற்றவாளிகளை பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கோ ஆளுங்கட்சிக்கு காணப்படும் தார்மீக தன்மை குறித்து மக்கள் கேள்வியெழுப்ப ஆரம்பித்துவிட்டனர். ஆணை வழங்கிய மக்களின் கேள்வி கனைகளிலிருந்து அரசாங்கத்தால் தப்பிக்க இயலாது என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

கட்சி உறுப்பினர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். 

தேசிய பட்டியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முன்னர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள ஏனைய பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு காண வேண்டியது அவசியம். அதற்காக அனைவரிடமும் கலந்துரையாடப்பட வேண்டும். கட்சியின் தவிசாளர் மற்றும் பிரதி தலைவர் போன்ற பதவிகளுக்கான நியமனங்கள் இரு மாதங்களுக்கு மேல் இழுத்தடிப்பது சிறந்ததல்ல. மேலும் புதிய உபாயங்களைப் பயன்படுத்தி கட்சியின் செயற்பாடுகளை மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகிறது. 

மறுபுறம் மரண தண்டனை கைதி பிரேமலால் ஜயசேகரவை பாராளுமன்றத்திற்கு அழைத்தமையானது ஒழுக்கம் குறித்து கேள்வியைத் தோற்றுவிக்கின்றது. அதற்கு சட்டத்தன்மை காணப்படுகிறதா என்பது மற்றொரு விடயமாகும். மேலோட்டமாக எதிர்க்கட்சி எதிர்ப்பினை வெளியிடுவதால் பயனில்லை. எனவே பிரேமலால் விடயத்தில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதோடு பாராளுமன்ற ஒழுக்கவிதிகள் குறித்து சபாநாயகருக்கு வலியுறுத்தப்பட வேண்டும். 

மேலும் ஆளுங்கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்பதற்காக 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக தன்மையை அழிப்பதற்கோ குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டவர்களை பாராளுமன்றத்திற்கு அழைப்பதோ சரியா என்ற கேள்வி சமூகத்தில் தற்போது ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதிலிருந்து தப்பிச் செல்ல அரசாங்கத்துக்கு முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment