13 குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், சூழல் மாசடைவுகள் மற்றும் நாட்டின் உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன - காவிந்த ஜயவர்தன - News View

Breaking

Post Top Ad

Thursday, September 10, 2020

13 குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும், சூழல் மாசடைவுகள் மற்றும் நாட்டின் உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்றன - காவிந்த ஜயவர்தன

(செ.தேன்மொழி) 

13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். மாகாண சபைகள் ஏற்கனவே முழு அளவில் செயலிழந்து போயுள்ள நிலையில் மாகாணங்களுக்கான தேர்தல் குறித்து அரசாங்கம் தொடர்ந்தும் மௌனித்திருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார். 

இதேவேளை சூழல் மாசடைவுகள் மற்றும் நாட்டின் உரிமைகள் அழிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தை எடுக்கின்றது என்பது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் எச்சரிக்கை விடுத்தார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை காரணம் காட்டியே அரசாங்கம் தேர்தலை வெற்றி பெற்றுள்ளது. தற்போது ஜனாதிபதி ஆணைக்குழுவிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 

இந்த உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விசாரணைகளை நடத்தப்பட்டு வருகின்ற நிலையில், இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு வெடி பொருட்கள் மற்றும் ஆயுதங்களை பெற்றுக் கொடுத்தவர்களையும் விசாரணைக்குட்படுத்த வேண்டும். 

கடந்த அரசாங்கத்திலே இந்த தாக்குதல் இடம்பெற்றது என்று குற்றம் சுமத்தி வருவதனால் எந்த பயனும் இல்லை. தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பில் கருத்து தெரிவித்து வரும் அரசாங்கம் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வது அவசியமாகும். 

நாட்டில் இன்று பாரிய சூழல் மாசடைவுகள் இடம்பெற்று வருகின்றன. மணல் மற்றும் மண் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரம் பெற்றுக் கொள்ள தேவையில்லை என்று கூறியதனால் கரையோரப் பகுதிகள் சேதமடைந்துள்ளன. 

சிங்கராஜா வனத்தில் பாதை அமைப்பதற்காக காடு அழிக்கப்பட்டு வருகின்றது. ஆனைவிழுந்தான் பகுதியில் கண்டல் தாவரங்களை அழித்தமை தொடர்பில் சாரதி ஒருவரும், வர்த்தகருமே கைது செய்யப்பட்டுள்ளனர். அதன் பின்னாள் அரசியல்வாதி ஒருவரின் சகோதரர் இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆனால், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. புத்தளம் பகுதியில் சூழல் மாசடைவுகள் மேலும் அதிகரித்துள்ளன. காட்டுக்கு தீ வைத்தல் மற்றும் மரங்களை வெட்டுதல் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 

இதேவேளை தொல்பொருள் சிறப்புரிமை பெற்ற இடங்களும் அழிக்கப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளின் போது அரசாங்கம் எவ்வாறான முடிவுகளை எடுக்கின்றது என்பது தொடர்பில் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள். 

மாகாண சபை கலைக்கப்பட்டுள்ள போதிலும் தேர்தலை நடத்துவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கப்பட வில்லை. ஆளும் தரப்பினர் இரு குழுக்களாக பிரிந்து மாகாண சபை முறைமை தேவை என்று சிலரும், தேவையில்லை என்று இன்னும் சிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு என்ன நடக்கப் போகின்றது. மகாண சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அரசாங்கம் தெரிவிக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad