மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவதை பார்க்கிலும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதினால் பாரியதொரு பாவம் வந்து விடாது : தலதா அத்துகோரல - News View

About Us

About Us

Breaking

Thursday, September 10, 2020

மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவதை பார்க்கிலும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதினால் பாரியதொரு பாவம் வந்து விடாது : தலதா அத்துகோரல

(செ.தேன்மொழி) 

'வியத்மக' அமைப்பினூடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சிமுறையை முன்னெடுப்பதாக கூறிக்கொண்டு அரசாங்கத்தை அமைத்தவர்கள், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்கி உலக சாதனை புரிந்துள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல கூறினார். 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தன்னை மாறுபட்ட பண்பு கொண்ட ராஜபக்ஷ ஒருவராகவே காண்பித்துக் கொண்டிருந்தார். வியத்மக அமைப்பின் ஊடாக புத்திஜீவிகளை உள்ளடக்கிய ஆட்சி முறையை முன்னெடுக்கப் போவதாகவே தெரிவித்து வந்தார். அதன் காரணமாகவே மக்கள் அவரை வெற்றி பெறச் செய்தனர். ஆனால், தற்போது புத்திஜீவிகள் இருக்கின்றார்களா என்பது கேள்விக்குறிய விடயமே. 

மறுபுறம் மரண தண்டனை கைதி ஒருவருக்கு உறுப்புரிமையை பெற்றுக் கொடுத்து உலக சாதனையை படைத்துள்ளது தற்போதைய அரசு. இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது மக்கள் எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள். மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமை பெற்றுக் கொள்ள முடியாது என்று சட்டமா அதிபர் தெரிவித்திருந்த போதும், அவருக்கு உறுப்புரிமை வழங்கி கறுப்பு தினமாக அன்றைய தினத்தை காண்பித்துள்ளனர். 

இந்நிலையில் எத்தனை கொலைகளைச் செய்தாலும் தேர்தலின் போது அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்டால் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்ள முடியும் என்பதை இந்த அரசாங்கம் செய்து காண்பித்துள்ளது. 

ராஜபக்ஷர்கள் தங்களது குடும்ப அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், சர்வாதிகார பண்புகளை உள்ளடக்கும் வகையிலும் 2010 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை கொண்டு வந்திருந்தார்கள். அதேபோன்று தற்போதும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகின்றார்கள். 

காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனாவின் ஆட்சி முறையை மீண்டும் கொண்டு வருவதாக இவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான பலம் பொருந்திய அதிகாரம் ஒன்றை ஜே.ஆர். போன்ற ஒரு நபர் பெற்றுக் கொண்டதினால் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால் ராஜபக்ஷர்களின் கையில் இந்த அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றால் எதிர்நோக்க வேண்டி ஏற்படும் விளைவுகள் தொடர்பில் கூற முடியாது. 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக மக்களுக்கே அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இதன்போது ஊடகங்களும் சுதந்திரமாக செய்றபட்டன. இந்நிலையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்து தங்களது குடும்ப அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர். 

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை நாங்கள் வரவேற்கின்றோம். இதேவேளை இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தையும் வரவேற்கின்றோம். ஆனால் அதற்குள்ளும் ஏதாவது திட்டம் இருக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டிலிருந்து மாட்டு இறைச்சியை இந்நாட்டுக்கு எடுத்துவரும் உயர்நிலை நபரொருவருக்கு வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 

பௌத்த நாடான இலங்கைக்கு மரண தண்டனை கைதி ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்புரிமையை வழங்குவதை பார்க்கிலும், இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதினால் பாரியதொரு பாவம் வந்து விடாது என்றே நான் எண்ணுகின்றேன் என்றார்.

No comments:

Post a Comment