(நா.தனுஜா)
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க செயற்பாடுகள் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் கனடா பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது.
இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்கினொன் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவை நேற்று சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து நினைவு கூரப்பட்டதுடன், இலங்கையின் வெளியுறவுக் கொள்கை தொடர்பில் ஜயநாத் கொலம்பகே கனேடிய தூதுவருக்குத் தெளிவுபடுத்தினார்.
மேலும் நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக கனடாவினால் வழங்கப்படும் உதவிகள், கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதுடன் கனடாவில் வாழும் இலங்கைப் பிரஜைகள் தொடர்பிலும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
No comments:
Post a Comment