சுனில் ரத்நாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகினார் - News View

About Us

About Us

Breaking

Thursday, September 24, 2020

சுனில் ரத்நாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணையிலிருந்து நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகினார்

யாழ்ப்பாணம், மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விஷேட படைப் பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மன்னிப்பளித்து விடுவித்தமைக்கு எதிராக, உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையிலிருந்து உயர் நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன நேற்று விலகியுள்ளார். 

இது தொடர்பிலான மனுக்கள் நேற்று பிரியந்த ஜயவர்தன, பி.பத்மன் சூரசேன மற்றும் யசந்த கோத்தாகொட ஆகியோர் அடங்கிய நீதியர்சர்கள் குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்பட்ட போதே அவர் இதனை அறிவித்தார். 

மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக சுனில் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட விஷேட மேன் முறையீட்டு மனு மீதான விசாரணைக்குரிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாத்தில் தாம் அங்கம் வகிப்பதால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக நீதியரசர் பிரியந்த ஜயவர்தன பகிரங்க நீதிமன்றத்தில் நேற்று அறிவித்துள்ளார். 

ஜனாதிபதியால் கடந்த மார்ச் மாதம் சுனில் ரத்நாயக்கவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி, மிருசுவில் படுகொலை விவகாரத்தில் தமது உறவுகளை பறிகொடுத்த இருவரும், மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சார்பிலும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அம்பிகா சற்குணநாதன் சார்பிலும் 4 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த மனுவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மனைத்துள்ளது.

No comments:

Post a Comment