தந்தையற்ற குழந்தையை போன்றே ஆளும் கட்சியின் 20 ஆவது திருத்தம், ஊடக கண்காட்சிகளை மாத்திரமே செய்து வருகின்றனர் - திஸ்ஸ அத்தநாயக்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

தந்தையற்ற குழந்தையை போன்றே ஆளும் கட்சியின் 20 ஆவது திருத்தம், ஊடக கண்காட்சிகளை மாத்திரமே செய்து வருகின்றனர் - திஸ்ஸ அத்தநாயக்க

(செ.தேன்மொழி) 

20 குறித்து ஆளும் கட்சிக்குள் பாரிய கருத்து முரண்பாடுகள் மேலோங்கியுள்ளது. யார் எதிர்த்தாலும் குறித்த திருத்தத்தை கொண்டுவருவதாக கூறியவர்கள் தற்போது பின்வாங்குகின்றனர். தந்தையற்ற குழந்தையை போன்றே ஆளும் கட்சியின் 20 ஆவது திருத்தம் காணப்படுவதாக எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. 

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கம் மாறுப்பட்ட கருத்துக்களை தெரிவித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாதொழித்து விட்டு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கே அரசாங்கம் முயற்சித்துள்ளது. 

இந்நிலையில், ஜனநாயக கொள்கைக்கு புறம்பாக 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சித்ததினால் நாங்கள் அதற்கு எதிர்ப்பை தெரிவித்தோம். 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துகொண்டு, அதனையே தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவே நாங்கள் எதிர்பார்த்திருக்கின்றோம். 

தற்போது 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஆளும் தரப்பு உறுப்பினர்களுக்குள்ளே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளது. யார் எதிர்ப்பு தெரிவித்தாலும் 20 ஆவது திருத்தத்தை கொண்டுவருவதாக ஆளும் தரப்பினர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது ஆளும் தரப்புக்குள்ளேயே மாறுப்பட்ட கருத்துக்கள் மேலோங்கியுள்ளது. 

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருத்தம் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக குழுவொன்றை நியமித்துள்ளார். இதேவேளை அமைச்சர் விமல் வீரவன்ச 'அரசியலமைப்பை திருத்துவதால் மக்களின் வயிற்று பசி தீராது' என்று கூறியுள்ளார். ஆரம்பத்திலிருந்தே நாங்களும் இதனைத்தான் தெரிவித்தோம். 

இந்நிலையில், கொவிட்-19 வைரஸ் பரவலினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காணுவதற்காகவே அரசாங்கம் தற்போது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை விடுத்து, 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை எமது தொடர்ச்சியான எதிர்ப்பு செயற்பாடுகளின் காரணமாக, மீண்டும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய சூழ்நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரத்தை அதிகரித்து விட்டு பிரதமரின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான ஏற்பாடுகளே மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேவேளை நீதி அமைச்சர் அலி சப்ரி தான் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையில் சமர்பித்திருந்தாலும், அதனை உருவாக்கியவர் யார் என்பதை அறிந்திருக்கவில்லை என்று தெரிவித்திருக்கின்றார். வீமல் வீரவன்ச 20 ஆவது திருத்தத்திற்கு தந்தையொருவர் இல்லை என்று கூறியிருக்கின்றார். இந்த திருத்தத்தை தயாரித்தவர் யார் என்பதை பிரதமரும், அமைச்சரவையும் மாத்திரமின்றி ஆளும் தரப்பின் ஏனைய எம்.பிக்களும், பாராளுமன்றத்திற்கு கூட விளக்கமில்லை. 

இந்நிலையில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை பாதுகாப்பதற்காக நாங்கள் வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளோம். அதற்கமைய 19 ஆவது திருத்தத்தை 19 பிளஸ் என்று தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கைகள் நாளை (இன்று) மாலை நான்கு மணிக்கு புதிய நகர மண்டபத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இதேவேளை நீதி அமைச்சர் ஊடகங்கள் முன்னிலையில் உதவியற்று இருக்கின்றமையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளிவிட்டு 20 ஆவது திருத்தம் தொடர்பில் பேசுவதில் அர்த்தம் இல்லை. நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கி வருகின்றது. சுற்றுலாத் துறையானது எமது நாட்டு வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற்றுக் கொடுத்துவரும் துறையாகும். 

2019 ஆவது ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் போது இந்த துறைக்கு ஓரளவு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. கொவிட்-19 வைரஸ் பரவலின் பின்னர் அது முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது. இதனால் வருடத்திற்கு 4-5 பில்லியன் ரூபாவை நாடு இழக்கின்றது. அதனால் நேரடியாக 5 இலட்சம் பேருக்கான தொழில் வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதுடன், மறைமுகமாக 20 இலட்சம் பேரின் தொழில் இல்லாமல் போயுள்ளது. 

அரச வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை பெற்றுக் கொடுக்கும் துறையொன்று வீழ்ச்சியடைவது மட்டுமன்றி, அதனால் 25 இலட்சம் பேருக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொழில் வாய்ப்பு இல்லாமல் போயுள்ள நிலைமையில், இது போன்ற கருத்தை தெரிவிப்பது சாதாரணமாகுமா? 

கடந்த ஆட்சி காலங்களில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்களின் போது நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை கண்டிருந்த போதும் அதனை மீணடும் கட்டியெழுப்புவதற்காக அப்போதைய அரசாங்கங்களிடம் சிறந்த வேலைத்திட்டங்கள் காணப்பட்டன. 

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்திலிருந்து மீண்டெழுவதற்காக சிலருக்கே வங்கி கடன்கள் கிடைக்கப் பெற்றன. இந்த நிலைமையை இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் நிவர்த்தி செய்துகொள்ள முடியாது. ஒரு வருடத்தை இலக்காக கொண்ட வேலைத்திட்மொன்றை செய்றபடுத்த வேண்டும். இரண்டு வருட காலத்திற்காவது அவர்களுக்கு வங்கிக் கடனை வழங்க வேண்டும். 

இதேவேளை இவர்கள் நீர் மற்றும் மின் கட்டணங்களை செலுத்துவதற்கும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். தற்போது செலுத்த வேண்டியுள்ள கடன்களை செலுத்துவதற்கும் இரு வருடங்கள் காலவகாசம் வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்த நிலைமையை வழமைக்கு கொண்டுவர இயலாது. 

தற்போது காணப்படும் பிரச்சினை என்ன வென்றால் நாட்டை முன்னேற்றுவதற்காக அரசாங்கத்திடம் வேலைத்திட்டங்கள் இல்லாததே. அரசாங்கம் ஊடக கண்காட்சிகளை மாத்திரமே செய்து வருகின்றது. பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டு மக்களை மீட்டெடுப்பதற்கு அரசாங்கத்திடம் உண்மையான அக்கறை இருக்குமாயின் உடனடியாக அது தொடர்பில் வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டும்.

No comments:

Post a Comment