ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறுதலாக இடம்பெற்றதாகும் - இலங்கை மருத்துவ சபை - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

ரஷ்ய பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறுதலாக இடம்பெற்றதாகும் - இலங்கை மருத்துவ சபை

(நா.தனுஜா) 

இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து ரஷ்யாவின் 3 பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறுதலாக இடம்பெற்றிருப்பதாகவும் இது குறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இலங்கை மருத்துவ கவுன்சில் அறிவித்திருக்கிறது. 

மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்குகின்ற பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து ரஷ்ய பல்கலைக்கழகங்கள் மூன்றை நீக்குவதாக இலங்கை மருத்துவ கவுன்லால் வெளியிடப்பட்ட தகவலையடுத்து, ரஷ்யா அதற்கு தனது கடும் விசனத்தை வெளிப்படுத்தியிருந்தது. 

இது விடயம் தொடர்பில் ரஷ்ய தூதரகத்தின் கலாசாரப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கலந்துரையாடல்களையோ அல்லது முன்னறிவிப்புக்களையோ செய்யாமல் ரஷ்ய பல்கலைக்கழகங்களை நீக்கும் தீர்மானத்தை இலங்கை மருத்துவ கவுன்சில் மேற்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

அதுமாத்திரமன்றி தற்போது நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரஷ்ய பல்கலைக்கழகங்களின் அதிகாரிகள் கடந்த காலங்களில் இலங்கைக்கு வந்துபோயிருப்பதுடன், அவர்கள் தமது உறுப்புரிமையைத் தொடர்ந்து பேணுவதற்கான கட்டணங்களை மருத்துவ கவுன்சிலுக்கு முறையாக செலுத்தி வருகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் இது குறித்து விளக்கமளித்திருக்கும் இலங்கை மருத்துவ கவுன்சில், புலமைப்பரிசில்களை வழங்கும் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இருந்து ரஷ்யாவின் 3 பல்கலைக்கழகங்கள் நீக்கப்பட்டமை தவறுதலாக இடம்பெற்ற விடயம் என்றும் இது குறித்து உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கூறியிருக்கிறது. 

இரு நாடுகளும் சுமார் 60 வருடங்களுக்கும் அதிகமான காலமாக இராஜதந்திர ரீதியான தொடர்புகளைப் பேணிவருவதாக சுட்டிக்காட்டிக்காட்டியிருக்கும் ரஷ்யா, இலங்கை மாணவர்களுக்கு குறிப்பாக மருத்துவத்துறையில் கல்வி பயிலும் அநேக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. 

அதுமாத்திரமன்றி இலங்கை மருத்துவ கவுன்சிலால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம், இலங்கைப் பிரஜைகளுக்கு ரஷ்ய அரசாங்கத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் திட்டத்தில் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் தூதரகம் நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment