மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தினால் முக்கிய சலுகைகள் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

மத்தள விமான நிலையத்தை பயன்படுத்தினால் முக்கிய சலுகைகள் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

(எம்.மனோசித்ரா) 

மத்தள விமான நிலையத்தில் விமானங்களை தரையிறக்குதல் மற்றும் நிறுத்தி வைத்தல் என்பவற்றுக்காக கட்டணம் அறவிடுவதை ஒரு வருடத்திற்கு இடை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மத்தள விமான நிலையத்திற்கு சர்வதேச விமானங்களை வரவழைப்பதை இலக்காகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 8 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவிக்கையில், சர்வதேச விமானங்களுக்கு அதிகபட்ச சுமையான ஒரு மெட்ரிக் தொன்னிற்கு அறவிடப்படும் தரையிறங்குவதற்கான கட்டணம் 4 டொலர்களாகும். இதேவேளை விமானத்தை நிறுத்தி வைப்பதற்கான கட்டணம் தறையிறக்குவதற்கான கட்டணத்தில் 10 சதவீதமாகும். 

இவற்றுக்கு மேலதிகமாக விமான நிலையத்தில் அறிவிடப்படும் விமான நிலைய ஏற்றுமதி வரியை எதிர்வரும் இரண்டு வருடங்களுக்கு அறவிடாமல் இருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது இது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளை நிதி அமைச்சு முன்னெடுத்துள்ளது. பயணிகளிடம் 60 அமெரிக்க டொலர் விமான நிலைய பயன்பாட்டு வரி அறவிடப்படுகிறது. அது அவர்களுடைய வருகை பத்திர விலையில் அடிப்படையிலாகும். 

பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும் போது சுற்றுலாப்பயணின் வருகையில் இது பாரிய தாக்கத்தை செலுத்தும் என்பது ஆய்வுகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது. 

விமான நிறுவனங்கள் மத்தள விமான நிலையத்தில் அறவிடப்படுகின்ற பயன்பாட்டு வரியை சிறிது காலத்திற்கு கைவிடுவதற்கு அல்லது குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராயுமாறு கோரிக்கை விடுத்திருந்தன. 

அத்தோடு மத்தள விமான நிலையத்தில் பணி சேவைகளுக்கு தள்ளுபடி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள விமான நிலையங்களில் பணி சேவைகளுக்காக அறவிடப்படும் கட்டணமானது ஏனைய பிராந்தியங்களில் அறவிடப்படும் கட்டணத்தை விட அதிகமாகும். அது மத்தள விமான நிலையத்தில் விமானங்களின் வருகையில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

இலங்கை விமான சேவை நிறுவனம் தற்போது இது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மத்தள விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு மானிய முறையில் எரிபொருளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரணத்தை வழங்குவதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. எதிர்காலத்தில் இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் சாதகமான பதிலை வழங்கும் என்று எதிர்பார்க்கின்றோம். 

இவ்வனைத்து செயற்பாடுகளும் மத்தள விமான நிலையத்தை செயற்திறன் மிக்கதாக மாற்றுவதற்காகவேயாகும். எதிர்வரும் 6 மாதங்களுக்குள் இலங்கையில் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மத்தள விமான நிலையத்தை மாற்றுவதற்கும் எதிர்பார்த்துள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment