
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கத்தின் ஏகாதிபத்திய போக்கை கொள்கை பிரகடனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். மக்கள் வழங்கி இருக்கும் பெரும்பான்மையை ராஜபக்ஷ்வினர் எதற்கு பயன்படுத்துவார்கள் என்பதை மக்கள் எதிர்காலத்தில் கண்டுகொள்வார்கள். கொள்கை பிரகடனம் வெறும் புஸ்வாணமாகும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் கொள்கை பிரகடனம் மிகவும் சிறப்பானது. பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக தெரிவித்திருந்தார். அதேபோன்று கொரொனா தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் கொராேனாவுக்கு பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு கட்டியெழுப்புவதென்ற எந்த திட்டமும் கொள்கை பிரகடனத்தில் இல்லை.
டிஜிட்டல் தொழிநுட்பம் தொடர்பாக ஜனாதிபதி கதைக்கின்றார். ஆனால் கொள்கை பிரகடனத்தில் அது தொடர்பில் ஒருவரியும் இல்லை. நாட்டில் இன்று மின்சாரம் துண்டிக்கப்படுகின்றது. அவ்வாறான நிலைமையை இல்லாமலாக்க எந்த திட்டமும் இல்லை.
மேலும் ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்துக்கு ஆதரவளிக்க நாங்கள் தயார். ஆனால் கொள்கை பிரகடனம் தெளிவில்லாமல் இருக்கின்றது. அவ்வாறான நிலைமையில் இதற்கு ஆதரவளிப்பது எவ்வாறு என்ற கேள்வி எமக்கு இருக்கின்றது.
அதேபோன்று ஒரே நாடு ஒரே சட்டம் என ஜனாதிபதி தெரிவித்திருக்கின்றார். அந்த ஒரே நாடு ஒரே சட்டம் ராஜபக்ஷ்வினரின் சட்டமாக இருக்க முடியாது. அதற்கு ஆதரவளிக்க முடியாது.
மேலும் நவீன தொழிநுட்பத்தை பயன்படுத்திக் கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் எவ்வாறு அதனை பயன்படுத்துவதென்ற எந்த வசனமும் கொள்கை பிரகடனத்தில் இல்லை.
மக்கள் எனக்கு மூன்றில் இரண்டு அதிகாரத்தை தந்திருக்கின்றார்கள். அதனால் எனக்கு தேவையான விடயங்களைத்தான் மேற்கொள்கின்றேன் என்ற அடிப்படையிலே கொள்கை பிரகடனம் அமைந்திருக்கின்றது. அதனால்தான் கொள்கை பிரகடன உரை மீதான விவாத்தை ஆரம்பிக்க அரசாங்கத்தில் சிரேஷ்ட உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் ராஜபக்ஷ் குடுத்தைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரான நிபுண ரணவக்கவை நியமித்திருக்கின்றனர்.
அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு வழங்கி இருக்கும் பெரும்பான்மைக்கு நாங்கள் தலை சாய்க்கின்றோம். அதேநேரம் இந்த பெரும்பான்மையை ராஜபக்ஷ்வினர் எதற்கு பயன்படுத்துவார்கள் என்பதை மக்கள் எதிர்காலத்தில் கண்டுகொள்வார்கள். அரசாங்கத்தின் இந்த பயணம் ஏகாதிபத்திய ஆட்சியின் ஆரம்பமாகும். அந்த ஏகாதிபத்தியம் அரசாங்கத்துக்குள்ளேயே தலைதூக்கி இருக்கின்றது.
அதனால்தான் சிரேஷ்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்தில் பின்வரிசையில் நிறுத்தி, அவர்களுக்கு தேவவையானவர்களை முன்னுக்கு கொண்டுவந்திருக்கின்றது. அதனால் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் எந்த வேலைத்திட்டமும் இல்லை. இருந்தபோதும் அரசாங்கம் நல்ல வேலைத்திட்டங்களை மேற்கொண்டால் அதற்கு நாங்கள ஆதரவளிக்க தயாராக இருக்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment