(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து விலகிச் செல்ல முடியாது. கொள்கை பிரகடனத்தை வாசிப்பதைவிட அதனை நடைமுறைப்படுத்துவதே முக்கியமாகும் என தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வினால் முன்வைக்கப்பட்டிருந்த அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் குறை இல்லை. வரலாற்றில் இருந்த ஜனாதிபதிகள் அனைவரும் இவ்வாறு கொள்கை பிரகடன உரைகளை நடத்தி இருக்கின்றனர். ஆனால் தெரிவிக்கப்படும் விடயங்களை நடைமுறையில் செயற்படுத்துவதை நாங்கள் காணவில்லை.
ஜனாதிபதி பதவியேற்றதன் பின்னரும் இவ்வாறானதொரு கொள்கை பிரகடன உரையை பாராளுமன்றத்தில் முன்வைத்தார். ஆனால் கடந்த 8 மாதங்களில் இ்டம்பெற்ற விடயங்களுக்கும் அவர் தெரிவித்த விடயங்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்ததை மக்கள் தெரிந்துகொண்டனர்.
மேலும் நாடு பாரிய பொருளாதார பிரச்சினைக்கு முகம்கொடுத்திருக்கின்றது. கொராெனா தொற்று காரணமாக அது இன்னும் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை கட்டுப்படுத்தவும் அதனால் பாதிக்கப்படும் மக்களை கடன் சுமையில் இருந்து மீட்கவும் அரசாங்கம் எடுக்கவுள்ள திட்டம் தொடர்பில் நாங்கள் அவதானமாக இருக்கின்றோம்.
அத்துடன் அரசாங்கத்துக்கு தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது. மக்களின் இந்த ஆணையை பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் தேர்தல் காலத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் இருந்து அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் விலகிச் செல்ல முடியாது. குறிப்பாக புதிய அரசியலமைப்பை தயாரித்தல், மக்களின் வாழ்க்கை சுமையை குறைப்பதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அத்துடன் 1977 இல் ஜே.ஆரின் அரசாங்கத்துக்கும் தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை கிடைத்தது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இருந்தது. ஆனால் இறுதியில் அந்த அரசாங்கத்தின் இறுதி நிலைமை மிகவும் மோசமாகவே அமைந்தது.
அதேபோன்று கடந்த மைத்திரி, ரணில் அரசாங்கத்துக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தது. ஆனால் நாட்டில் பாரிய ஊழல் மோசடி அதிகரித்ததே தவிர அதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிக்கப்பட்டது.
அதனால் வரலாற்றில் மக்களுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இந்த அரசாங்க காலத்திலும் ஏற்படமால் பாதுகாக்கும் பாரிய சவால் அரசாங்கத்துக்கு இருக்கின்றது. அந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு கையாளப்போகின்றது என்பதை நாங்கள் பார்க்கப்போகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment