வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படும் : நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, August 22, 2020

வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்படும் : நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டம்

தமிழ் தேசிய இனத்தின் கனவுகளை ...
வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களங்களின் பிடியில் பயன்பாடின்றிக் சிக்கிக் கிடக்கும் நிலங்களை விடுவித்து நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய செய்கையை மேம்படுத்துவதே தமது நோக்கம் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலுணவு மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளம் சார்ந்த உணவு வகைகளில் இந்த நாட்டை தன்னிறைவு காணச் செய்வதும் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்து அதிகளவில் அந்நியச் செலாவணியை ஈட்டிக்கொள்வதும் தமது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச் குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 9 ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாலாளர் நாயகம் என்ற வகையில் நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் (20.08.2020) உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் எம்மால் இயன்ற அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு நாமும் கடுமையாக உழைத்து, ஒத்துழைப்பு வழங்குவதே எமதும் முக்கிய நோக்கமாக இருக்கின்றது.

அந்தவகையில், எமது புலம்பெயர் உறவுகளுக்கு ஓர் அழைப்பினை விடுத்திருந்தேன். அதாவது, இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருமாறு அழைப்பு விடுத்திருந்தேன்.

எமக்கு முந்திய ஆட்சிக் காலத்தில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வந்தவர்வகளுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் போன்று எதிர்காலத்தில் இடம்பெறாது என்ற உத்தரவாத்தினையும் வழங்கியுள்ளேன்.

அடுத்ததாக, கடற்றொழில் அமைச்சின் மூலமாக குறிப்பாக, கரையோர மற்றும் அழ்கடல் கடற்றொழிலை நவீன தொழில்நுட்பங்களுடன் மேலும் விரிவாக்கஞ் செய்வதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், நன்னீர் உள்ளிட்ட அனைத்து நீரியல் வளச் செய்கைகளை மேலும் பரவலாக்கி மேம்படுத்தும் ஏற்பாடுகளும் இத்துறையை மனைக் கைத்தொழிலாக முன்னெடுக்கக்கூடிய ஏற்பாடுகளும் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நாட்டில் கடற்றொழில் மற்றும் நன்னீர் உள்ளிட்ட நீரியல் வளச் செய்கை கைத்தொழில்கள் மூலமாக நாட்டு மக்களிடையே போசாக்கினை வளர்ப்பதும், இத்தொழிற்துறைகளில் ஈடுபட்டுள்ள மக்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் எமது முக்கிய நோக்கமாகும்.

அதேபோன்று, ஜனாதிபதி அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டதன் அடிப்படையில், வடக்கில் காண்பபடும் விவசாயத்திற்கு பொருத்தமான காணிகள் அனைத்திலும் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டு நெல் உள்ளிட்ட உப உணவுப் பயிர்களை அதிகளவில் உற்பத்தி செய்வதன் ஊடாக அவற்றின் இறக்குமதிகளை நிறுத்தி, உணவு உற்பத்தியில் எமது நாட்டை தன்னிறைவு காணச் செய்வதே எமது ஆரம்ப இலக்காகும்.

அதன் அடுத்த இலக்கு ஏற்றுமதிக்கான வழியேற்படுத்தலாகும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment