(எம்.மனோசித்ரா)
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச் சீட்டு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பவற்றில் ஏதேனுமொரு அடையாள அட்டையையும் கொண்டிருக்காத நபருக்கு தபால் மூல வாக்களிப்பளிப்பிற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வழமையாக அலுவலக அடையாள அட்டையை வாக்களிப்பதற்கு ஏற்றுக் கொள்ளப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள பல விடயங்களைக் கவனத்தில் கொண்டு இம்முறை தபால் மூலம் வாக்களிக்கும் வாக்காளர் அலுவலக அடையாள அட்டையைப் பயன்படுத்தினால் அவர் தெரிவத்தாட்சி அலுவலரினால் நியமிக்கப்படும் அதிகாரியால் அடையாள பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்.
இது தொடர்பில் அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள், அஞ்சல் வாக்காளர்கள் அறிவுறுத்தப்படுவதுடன், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டை உள்ளிட்ட ஏற்றுக் கொள்ளப்படும் அடையாள அட்டை எதுவும் இல்லாத ஆளொருவருக்கு அஞ்சல் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்றும், அதன்படி கடமையை ஆற்றுமாறு உரிய தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment