கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நுழைத்து நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - அர்ஜுன ரணதுங்க - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நுழைத்து நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் - அர்ஜுன ரணதுங்க

(நா.தனுஜா)

2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத் தொடரின் போது ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றிருப்பின், அதுபற்றி இத்தனை வருடங்களும் ஏன் குறிப்பிடவில்லை என்ற கேள்வியொன்று காணப்படுகின்றது. அப்போது எதுவித நடவடிக்கைகளையும் எடுக்காமல், இப்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் ஏன் இது பற்றி பேசுகின்றார்கள் என்ற பிரச்சினை எனக்கும் உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறிகொத்தாவில் நேற்று புதன்கிழமை ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது, இதில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்புபட்டிருப்பின் விசாரணைகளை முன்னெடுப்பது சிறந்தது. அதேவேளை இது குறித்து உரிய முறையில் விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, அனைத்து கிரிக்கெட் வீரர்களின் பெயர்களையும் இதற்குள் நுழைத்து நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். 

இவ்விடயத்தில் அரசியல் மற்றும் விளையாட்டுத்துறை ஆகியவற்றைவிட, இதனால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பைத்தான் நான் முன்நிலைப்படுத்துகின்றேன். இதில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்புபட்டிருப்பின் விசாரணைகளை முன்னெடுப்பது சிறந்தது. எனினும் அதற்கென ஓர் ஒழுங்கு இருக்கிறது.

எம்மை ஒவ்வொரு ஆணைக்குழுக்களுக்கு அழைக்கின்றார்கள். தற்போது நாட்டில் புதிதாக நடைபெறுகின்றவற்றைப் பார்க்கையில், ஒவ்வொருவரும் தமக்கு ஏற்புடைய விதத்தில் சட்டத்தைப் பயன்படுத்துகின்றார்கள். எனவே விளையாட்டு வீரர்கள் அவதானமாக செயற்பட வேண்டும். அதேவேளை எவரேனும் தவறிழைத்திருப்பின் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் முக்கியமாகும்.

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் இதுபற்றி அறிந்திருந்தால் அப்போதே விசாரணைகளை மேற்கொண்டு ஏன் இறுதி முடிவொன்றை எட்டவில்லை என்ற கேள்வி எனக்கும் உண்டு. எனினும் சந்தேகம் காணப்படுமாயின் முறையான விசாரணைகளை மேற்கொள்வதில் தவறில்லை என்றே கருதுகின்றேன்.

கிரிக்கெட் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது என்று நான் பலமுறை கூறியும், அதனைத் தடுக்க வேண்டிய தேவை எவருக்கும் இருக்கவில்லை. குறைந்தபட்சம் ஊழல்வாதிகளை கிரிக்கெட்டிலிருந்து விலக்குவதற்கு எமது அரசாங்கத்தினால் முடிந்தது. யார் கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் எ ன்பது மக்களுக்குத் தெரியும். அவர்களுக்கு எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள் என்றார்.

No comments:

Post a Comment