விசாரணைகள் நிறைவில் விடயங்களை அறிந்துகொள்ளலாம் - அரவிந்த டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Wednesday, July 1, 2020

விசாரணைகள் நிறைவில் விடயங்களை அறிந்துகொள்ளலாம் - அரவிந்த டி சில்வா

(எம்.எம்.சில்வெஸ்டர்)

2011 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் நேற்றுமுன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கமைய 2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது இலங்கையின் கிரிக்கெட் அணியின் தெரிவுக்குழுத் தலைவராக கடமையாற்றிய அரவிந்த டி சில்வாவிடம் நேற்றுமுன்தினம் வாக்கு மூலம் பதிவு செய்ததாக விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகா குறிப்பிட்டார்.

நான்கு சட்டத்தரணிகள் சகிதம் விசாரணைப் பிரிவுக்குள் பிற்பகல் 2.10 மணிக்கு சென்ற அரவிந்த டி சில்வா சுமார் ஆறரை மணித்தியாலங்கள் விசாரணை செய்யப்பட்டதன் பின்னரே இரவு 8.50 மணியளவில் வெளியில் வந்தார்.

விசாரணை தொடர்பாக அரவிந்தவிடம் கேட்டபோது, “விசாரணைப் பிரிவினர் என்னிடம் வாக்கு மூலம் பெற்றனர். மேலதிக விபரங்கள் எதனையும் வெளிப்படுத்த வேண்டாம் என எனக்கு அறிவுரை வழங்கினர். எனவே விசாரணை முடிவில் விடயங்களை அறிந்துகொள்ள முடியும்” என்றார்.

இதேவேளை இந்த விசாரணை தொடர்பாக விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் பொன்சேகாவிடம் கேட்டபோது, “ அரவிந்த டி சில்வாவிடம் இன்றைய தினம் (நேற்றுமுன்தினம்) மிக நீண்ட நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றுக்கொண்டோம்” என்றார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரரான உப்புல் தரங்கவிடம் விசேட பொலிஸ் விசாரணைப் பிரிவினரால் வாக்கு மூலம் பெறப்பட்டது.

விசாரணை குறித்து தரங்க கூறுகையில், “2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணம் தொடர்பில் அவர்களால் முன்னெடுக்கப்படும் விசாரணைக்களுக்கு அமைவாகவே என்னை அழைத்திருந்தனர். அவர்கள் என்னிடம் சில கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கு நான் பதிலளித்துள்ளேன்” என்றார்.

No comments:

Post a Comment