(ஆர்.யசி)
சீனாவில் பரவிவரும் எச்1 என்1 தொற்று நோய் உலகளாவிய ரீதியில் பரவக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் இலங்கை இந்த விடயத்தில் மிகக் கவனமாக தமது சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தொற்று நோய் தடுப்பு பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவிக்கின்றார்.
கொவிட் -19 வைரஸ் பரவல் இன்னமும் முடிவுக்கு கொண்டுவரப்படாத நிலையில் சீனாவின் ஹூவான் மாகாணத்தில் மீண்டும் புதிய வகையிலான வைரஸ் பரவல் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
எச்1 என்1 என கூறப்படும் பன்றிகளின் மூலமாக பரவும் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. இப்போது வரையில் இது அந்த மாகாணத்தில் விவசாய நிலங்களில் வேலை செய்யும் விவசாயிகளிடம் பரவியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரஸானது உலகளவில் பரவும் ஏனைய வைரஸ் தொற்றுக்களுக்கு சமமானதான அடையாளங்களை கொண்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்த வைரஸ் குறித்து கவனமாக செயற்பட வேண்டும் என சீன வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிருகங்களில் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் இந்த வைரஸ், மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவ ஆரம்பித்தால் அது மீண்டும் சமூக பரவலாக மாறி உலகவில் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனினும் இப்போது சீனாவில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் சமூக பரவலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாகவும் ஆரம்பத்தில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாகும் சீன வைத்திய நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
இலங்கையில் கொவிட் -19 தொற்று நோய் குறித்த மருத்துவ பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் புதிய வகையிலான வைரஸ் பரவல்கள் உள்ளதாக இருந்தால் எம்மால் உடனடியாக கண்டறிய முடியும்.
இலங்கையில் தற்போது துரித மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காரணத்தினால் இப்போது வரையில் இலங்கை பாதுகாப்பான இடத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment