(செ.தேன்மொழி)
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டிற்கு உரையாற்றுவதாக குறிப்பிட்டு தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலே ஈடுப்பட்டு வருகின்றார். இது தேர்தல் சட்டவிதிகளுக்கமைய முறைக்கேடான செயற்பாடு என்பதால் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேயபால ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி தங்களால் ஆட்சியமைக்க முடியும் என்று தெரிவித்து வந்த ஆளும் தரப்பினர், வடகிழக்கு மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக இராணுவ வீரர்களை கொலை செய்ததாக கூறி பெருமைகொள்ளும், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை பயன்படுத்தி தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் காலங்களிலே தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டவிதிகளுக்கமைய வேட்பாளர்கள் செயற்பட வேண்டியதே முறையாகும். ஆனால் ஆளும் தரப்பினர் தேர்தல் சட்டவிதிகளை கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தாலும், அவர் தற்போது பொதுத் தேர்தல் வேட்பாளரே. அதனால் இந்த தேர்தல் சட்டவிதிகளுக்கு அவரும் கட்டுப்பட வேண்டும்.
இந்நிலையில் அவர் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதுடன், தனது பிரதமர் பதவியையும் தேர்தல் பிரசாரங்களுக்காக துஷ்பிரயோகம் செய்து வருகின்றார். தேசத்திற்கு உரையாற்றுவதாக குறிப்பிட்டு தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகின்றார். இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் என்ற போதிலும், அவர் பொதுத் தேர்தல் வேட்பாளராகவே பிரசாரங்களில் ஈடுப்பட்டு வருகின்றார். மஹிந்த ராஜபக்ஷவும் இதுபோன்றே செயற்பட வேண்டும்.
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு அனுமதி கொடுக்காமலிருந்ததினால் கடந்த காலங்களில் ஆளும் தரப்பினர் ஆணைக்குழுவை பெரிதும் விமர்சித்து வந்தனர். ஆனால் மக்களின் சுகாதார பாதுகாப்பை கருத்திற்கொண்டே ஆணைக்குழு அவ்வாறு செயற்பட்டிருந்தது என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மானின் கருத்தை பொருட்படுத்த வேண்டாம் என்று மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இவர்கள்தான் ஜனாதிபதி தேர்தல் காலங்களில் சிறுபான்மை மக்களின் ஆதரவின்றியே நாங்கள் ஆட்சியமைப்போம் என்று கூறியவர்கள்.
தெற்கில் சிங்கள மக்கள் முன்னிலையில் இராணுவத்தினர் மீதும், தேசத்தின் மீதும் பற்றுக் கொண்டுள்ளதாக காண்பித்துக் கொள்ளும் இவர்கள். வடக்கு, கிழக்கு பகுதிகளில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கருணா போன்ற விடுதலை புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சியமைத்து எட்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர்கள் வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வில்லை. கொவிட் - 19 வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் அவர்களால் முடியாமல் போயுள்ளது.
அனைத்து பாகங்களிலும் வீழ்ச்சியடைந்துள்ள அரசாங்கம் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று தருமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்து வந்தது. தற்போது மக்கள் மத்தியில் தங்களுக்கு வரவேற்பு இல்லை என்பதை அறிந்து கொண்டு பெரும்பான்மை ஆதரவை மாத்திரம் பெற்றுக் கொடுத்தால் போதும் என்று கூறும் அளவிற்கு வந்துள்ளது.
இந்நிலையில் நாளடைவில் எங்களுக்கு எதிர்க்கட்சி என்ற இடம் கிடைத்தால் போதும் என்று பிரசாரம் செய்யக்கூடிய நிலைமையும் அரசாங்கத்திற்கு ஏற்படலாம் என்றார்.
No comments:
Post a Comment