(இராஜதுரை ஹஷான்)
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை பெற்றால் மாத்திரமே, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி முழுமையடையும். அரசியலமைப்பு பேரவை சுயாதீனமற்றது. அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டவர்களே பேரவையின் உறுப்பினர்களாக செயற்படுகிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டங்கள் நாளை முதல் (இன்று) ஆரம்பமாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அனைத்தையும் மக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரமாக எடுத்துரைக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேர்தல் பிரசாரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கொள்கைகள் பொதுத் தேர்தலிலும் பின்பற்றப்படும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவினை பெற்றால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலின் வெற்றி முழுமைபெறும். பல எதிர்பார்ப்புக்களின் மத்தியில் பெரும்பான்மை மக்கள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை தெரிவு செய்தார்கள்.
எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.
சுயாதீன ஆணைக்குழுக்களின் சுயாதீனத்தன்மை பல விடயங்களில் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாடுகளை உதாரணமாக்கலாம்.
அரசியலமைப்பு பேரவை சுயாதீனமற்றதாக இருக்கும் போது ஆணைக்குழுக்கவின் செயற்பாடுகள் விமர்சனங்களுக்குள்ளாகுவது சாதாரணமான விடயம்.
அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் பொதுத் தேர்தலின் ஊடாகவே தீர்வை பெற முடியும். கடந்த அரசாங்கம் போன்ற பலவீனமாக அரசாங்கம் மீண்டும் தோற்றம் பெறகூடாது என்பதில் உறுதியாக உள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment