தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொள்ளும் தமிழ் தேசிய தலைமைகள் மொத்த வியாபாரிகளாக மாறி வருகின்றனர் - வியாழேந்திரன் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 25, 2020

தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொள்ளும் தமிழ் தேசிய தலைமைகள் மொத்த வியாபாரிகளாக மாறி வருகின்றனர் - வியாழேந்திரன்

தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்துக் கொள்ளும் தமிழ் தேசிய தலைமைகள் பாராளுமன்றத்தில், சிங்கள கட்சிகளுக்கு ஆதரவளித்து மொத்த வியாபாரிகளாக மாறி வருவதாக, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு அலுவலகத்தில் தேர்தல் சம்பந்தமாக அவரிடம் கருத்து கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழர்களின் உரிமையைப் பெறப்போவதாக உணர்ச்சிகளைக் கிளறி வாக்குகளைச் சேகரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பின்னர் பாராளுமன்றத்திற்கு வந்து சிங்களக் கட்சிகளை ஆதரிக்கின்றன. இவர்கள் மொத்த வியாபாரிகளாகி, தமது தேவைளையே பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

இதனால் வாக்களித்த தமிழர்கள் ஏமாற்றப்படுவதே வரலாறாகி வருகிறது. கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைகோர்த்து செயற்பட்டு தமிழ் மக்களுக்கு தீர்வையும் பெற்றுக் கொடுக்கவில்லை. உரிமையையும் பெற்றுக் கொடுக்கவில்லை. அபிவிருத்தியையும் இவர்களால் பெற முடியாமல் போயிற்று.

தமிழ் மக்களை ஏமாற்றி காலத்தை நீடித்தார்களே தவிர நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இவர்கள் நடந்து கொள்ள வில்லை. ரணிலுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ரணிலையும் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தையும் பாதுகாக்கத் தெரிந்த தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழர்களைப் பாதுகாக்கத் தெரியவில்லை.

தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் இப்போதும் தமிழர்களை ஏமாற்ற இவர்கள் திட்டமிட்டுள்ளனர். உரிமையுடன் கூடிய அபிவிருத்தியைப் பெறப்போகின்றோம். நிலையான அபிவிருத்தியே எமது மக்களின் எதிர்பார்ப்பு என்றெல்லாம் தமிழ் தேசிய தலைமைகள் பேசுவது தமிழ் மக்களை ஏமாற்றும் அரசியலாகும்.

இவ்வாறான போலி வார்த்தைகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மயங்கமாட்டார்கள். இவர்களை நம்பி ஏமாறுவது, தமிழர்களையே ஏமாற்றுவதாய் அமைந்து விடும்.

"உரிமை உரிமையென்று பேசிவிட்டு போனாலும்" சலுகைக்காக சோரம் போகமாட்டோம்" என்று கூறும் இவர்கள், ரணிலின் அரசாங்கம் வழங்கிய சலுகைகளைப் பெற்று தமிழர்களையே ஏமாற்றியுள்ளனர்.

தமிழ் தேசிய தலைமைகள் அரசாங்கத்தின் அத்தனை சலுகைகளையும் அனுபவித்திட்டுத்தான் வெளியேறுகின்றார்கள். இவர்களால் அரசாங்க சம்பளம், அரசாங்க பொலிஸ், அரசாங்க பாதுகாப்பு, வாகன வரிச்சலுகைகள், பாராளுமன்றம் சாப்பாட்டு போன்ற அரசாங்க சலுகைகள் எல்லாவற்றையும் அனுபவிக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் ஆளுங்கட்சியில் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களை பாராளுமன்றம் அனுப்பினாலே எமது சமூகத்தின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியும். எமது சமூகத்தின் இருப்பு கேள்விக் குறியாகும் நிலையை உடைத்தெறிய வேண்டுமானால் தமிழ் மக்களின் அரசியல் சகல அதிகாரங்களுடனும் தமிழர் கைகளில் இருக்க வேண்டும்.

எனவே மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் தற்போதைய ஜனாதிபதி, பிரதமரின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சின்னத்துக்கு புள்ளடியிட்டும், எனக்கு வாக்களித்தும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்தில் வென்றெடுப்பது பற்றிச் சிந்திக்க வேண்டும் என்றார்.

(வெல்லாவெளி நிருபர்)

No comments:

Post a Comment