(செ.தேன்மொழி)
பாராளுமன்றம் செயற்படாமல் ஜனாதிபதி மாத்திரம் ஆட்சி நடத்திய காலப்பகுதியாக இக்காலம் வரலாற்றில் பதியப்படும் என்று தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க, தற்போது இடம்பெறுவது ஜனநாயக ஆட்சியா, அரசியலமைப்பு அடிப்படையான ஆட்சியா அல்லது சர்வாதிகார ஆட்சியா என்பதை மக்களே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்சிமுறை தொடர்பில் மக்கள் திருப்தி கொண்டிருந்தால், தொடர்ந்தும் அவர்களையே ஆட்சியில் அமர்த்திக் கொள்ளலாம் என்றும் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது, பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இதுவரையில் புதிய பாராளுமன்றம் நியமிக்கப்படாமல் ஆட்சி இடம்பெற்று வருகின்றது. இதனால் இந்த காலப்பகுதி பாராளுமன்றம் செயற்படாமல் ஆட்சி இடம்பெற்ற காலப்பகுதியாக வரலாற்றில் பதியப்படும்.
தற்போது இடம்பெறும் ஆட்சி முறை ஜனநாயக பண்புமிக்கதா? அல்லது அரசியலமைப்புக்கு அமைவானதா? சர்வாதிகாரதனமானதா ? என்பது தொடர்பில் மக்களே சிந்தித்து தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை உருவாக்குவதற்காக பெரும் பங்காற்றியவர்களே இன்று அரசாங்கத்தின் போக்கை விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.
மத்திய வங்கியின் நிதிமுகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர்களான நிஹால் பொன்ஷேகா, துஷ்டி வீரகோன் ஆகியோர் தங்களின் பதவிகளை துறந்துள்ளனர். இவ்வாறான நிலையில் நிதி முகாமைத்தும் முறையாக இடம்பெறாவிட்டால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அரசாங்கத்தின் தலையீட்டின் காரணமாகவே இவ்வாறு தேர்ச்சி பெற்ற அதிகாரிகள் தங்களது பதவியிலிருந்து விலகுகின்றனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனைவருக்கும் பொதுவாக சட்டம் செயற்படுத்தப்பட வேண்டும் என்கிறார். ஆனால் இந்த பொதுவான சட்டத்தின் செயற்பாடு தொடர்பில் அண்மையில் ஒரு விடயத்தை அவதானிக்க கூடியதாக இருந்தது. மறைந்த அமைச்சர் தொண்டமானின் மரண நிகழ்வில் இந்த பொதுவான சட்டம் எவ்வாறு இயங்கியது என்பது தொடர்பில் மக்கள் தெளிவுற்றிருப்பார்கள்.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளது, ஒளடதங்களுக்கு விலைக்கட்டுப்பாடு இல்லை, அரச ஊழியர்களின் ஊதியத்திலிருந்து அரைப்பகுதி அவர்களுக்கு அறிவிக்காமலே அரசாங்கத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளது.
உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும் அதன் பயன்கள் மக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட வில்லை, தனியார் துறையைச் சேர்ந்த ஒரு இலட்சம் பேருக்கு தொழில் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது, பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்காலத்தில் எதிர்நோக்கவேண்டிய இடர் மிகு தருணத்தில் நாடு உள்ளது.
தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியது போன்று நாங்களும் மக்களிடம் இப்போது நலமா? என்று கேட்கின்றோம். நலம் என்றால் எதிர்வரும் பொதுத் தேர்தலின் போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர்த்துங்கள் என்று ஜனாதிபதித் தேர்தலின் போது அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்த 69 இலட்சம் மக்களிடம் நாங்கள் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாடே பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ள நிலையில் வீதிகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதற்கு அரசாங்கம் சீனா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து பல மில்லியன் ரூபாய்களை கடனாக பெறுவதற்கு தீர்மானித்துள்ளது. இந்த கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் இது அவசியம்தானா?
இதேவேளை அமைச்சர் பந்துல குணவர்தன ஹோமாகமவில் விளையாட்டு அரங்கை அமைப்பதென உறுதியாக இருக்கின்றார். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றால், நாம் எதற்காக முகக் கவசம் அணிய வேண்டும்.
அரசாங்கத்தின் திருப்தியற்ற செயற்பாடுகள் தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று எண்ணியே அது செயற்பட்டு வருகின்றது. எதிர்க்கட்சி என்ற வகையில் நாங்கள் அவற்றை நினைவுபடுத்துகின்றோம். நாட்டு மக்களே சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment