சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் ஆலோசனை

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு பொலிஸார், கடலோர காவற் படையினர், கடற்படையினர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினர் ஆகியோரை ஒருங்கிணைக்கும் வகையிலான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறும் அமைச்சரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் நேற்று (02.06.2020) கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலிலேயே குறித்த அறிவுறுத்தல்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டுள்ளது.

நேற்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத்தின் பிரதிநிதிகள், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளினால் பல்வேறு அசௌகரியங்கள் எதிர்கொள்ளப்படுவதாகவும் குறிப்பாக கொக்குளாய் போன்ற பிரதேசங்களில் இருந்து வந்து முல்லைத்தீவு கடற் பரப்பில் தொழிலில் ஈடுபடுகின்றவர்களினாலேயே குறித்த சட்ட விரோத செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சட்டவிரோத செயற்பாடுகளில் யார் ஈடுபட்டாலும் அதனை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்ததுடன் கடற்றொழிலாளர்களுக்கும் கடல் வளத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய அனைத்து சட்ட விரோத செயற்பாடுகளுக்கும் எதிராக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கடலிலும் தரையிலும் ஒருங்கிணைக்கப்பட்ட பொறிமுறை ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

நேற்றைய கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் சமாசங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment