(எம்.மனோசித்ரா)
அரச மற்றும் தனியார் ஊழியர்களின் வேலை நேரத்தை மாற்றுவதற்கு திணைக்கள அல்லது நிறுவன பிரதானிகளிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்த போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இவ்வாறு வேலை நேரத்தை மாற்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க தயாராகவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், பாடசாலைகளை ஆரம்பிக்க தீர்மானித்திருந்த இந்த சந்தர்ப்பத்தில் கொரோனா பரவல் உக்கிரமடைந்துள்ளது.
பாடசாலை சேவையில் ஈடுபடும் வாகனங்களும் வழமையான பாதைகளிலேயே பிரயாணிக்கும். எனவே அது தொடர்பில் தற்போது வேறுபட்ட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பாடசாலை போக்குவரத்து சேவையை எவ்வாறு பாதுகாப்பாக முன்னெடுப்பது என்பது பற்றி கல்வி அமைச்சருடனும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை அரச திணைக்களங்களிடம் போக்குவரத்து அமைச்சு கோரிக்கையொன்றினை முன்வைக்கிறது. அதாவது அரச ஊழியர்கள் சேவைக்கு வருகை தரும் நேரம் மற்றும் வீட்டுக்குச் செல்லும் நேரம் என்பவற்றை மாற்றுமாறு திணைக்கள அல்லது நிறுவனப் பிரதானிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம். தனியார் துறையினரிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றோம்.
புகையிரதம் மற்றும் பேரூந்துகளில் ஏற்படும் சன நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த கோரிக்கை விடுக்கப்படுகிறது. நாட்டில் காணப்படுகின்ற நிலைமைக்கு ஏற்ப நாம் செயற்பட வேண்டியிருக்கிறது. அவ்வாறு செயற்படும் போது சமூக இடைவெளி குறித்தும் கவனம் செலுத்த முடியும்.
எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரம் மாற்றப்பட்டால் இரவு வேலைகளானாலும் கூட எம்மால் முறையான போக்குவரத்தினை ஏற்பாடு செய்ய முடியும். பேரூந்து சேவை, புகையிரத சேவை திணைக்களம் மற்றும் போக்குவரத்து அமைச்சு இதற்குத் தயாராகவிருக்கிறது.
பாடசாலை நேரம் அலுவலக நேரத்தில் பிரயாணம் ஏனைய மக்கள் வெளியில் வருவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். குறித்த நேரத்திற்கு முன்பாக அல்லது அதற்கு பின்னர் வெளியிடங்களுச் செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
No comments:
Post a Comment