(நா.தனுஜா)
அமெரிக்காவில் தற்போது இடம்பெற்றுவரும் சம்பவங்களிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். நாட்டு மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதோடு, அமைதியான முறையில் எமது சுதந்திரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். என்று முன்னாள் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா வலியுறுத்தியிருக்கிறார்.
தற்போது அமெரிக்காவில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் போராட்டங்களை ஆவணப்படுத்தும் ஊடகவியலாளர்கள் மீதும் பொலிஸாரால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவது குறித்து 'த கார்டியன்' பத்திரிகையின் ஊடகவியலாளர், அவரது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான பதிவொன்றைச் செய்திருக்கிறார்.
அப்பதிவை மேற்கோள்காட்டி அலிசாஹிர் மௌலானா பின்வருமாறு கருத்து வெளியிட்டிருக்கிறார்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களில் மாத்திரம் 90 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை மிகவும் கவலையளிக்கிறது.
இலங்கையர்களாகிய நாம் இவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தமது நாட்டு மக்களின் சுதந்திரம் தொடர்பில் உத்தரவாதத்தை வழங்கல் மற்றும் அரசாங்கம், நீதித்துறை மற்றும் மக்கள் மத்தியில் அதிகாரங்களைப் பிரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய தமது உரிமைகள் சட்டம் குறித்து அமெரிக்கா பெருமையடைவதுண்டு.
ஆனால் 200 வருடங்களுக்கும் அதிகமான காலம் நிலவிய அந்தக் கோட்பாடுகள் மீறப்படுவதையும், அவமதிக்கப்படுவதையுமே நாம் தற்போது காண்கின்றோம். எமது நாடு அதன் அரசியலமைப்பில் முறையாகக் கட்டமைக்கப்பட்ட சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறது.
அமெரிக்கா அதன் சுதந்திரத்தை மீறியமைக்காகக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மதிப்பளிக்கும் அதேவேளை எமது சுதந்திரத்தை அமைதியான முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கு ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் என்பதை தற்போதைய அமெரிக்காவின் நிலையை உதாரணமாகக் கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment