மக்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் தந்தையின் குரலாய் ஒலிப்பேன் : வாக்குகளுக்காகவும் தேர்தலுக்காகவும் என்னை மட்டுபடுத்தி கொள்பவள் அல்ல - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

மக்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் தந்தையின் குரலாய் ஒலிப்பேன் : வாக்குகளுக்காகவும் தேர்தலுக்காகவும் என்னை மட்டுபடுத்தி கொள்பவள் அல்ல

நற்செயல்களை உதாரணமாக்குவது எவ்வகையிலும் விளம்பரம் ஆகாது அதில் விளம்பரபடுத்துவதில் எந்த தவறும் இல்லை, தவறுகள் செய்தால்தான் ஒளித்து மறைக்க வேண்டும். நான் விளம்பரப்படுத்துகிறேன் என்றால் ஆம் என்பதே என் பதில், தவறான பதிவுகளையும், ஏனையோருக்கு தீங்கு விளைவிக்கும் எதனையும் நான் செய்வதுமில்லை. விளம்பரப்படுத்துவதுமில்லை என மலையக மக்கள் முன்னணியின் பிரதிச் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

தனது சேவைகள் தொடர்பில் எழும் விமர்சனங்கள் தொடர்பில் விளக்கமளித்த அவர், தொடர்ந்தும் கூறுகையில், மறைந்த தலைவர் சந்திரசேகரனின் புதல்வியான நான் ஒரு போதும் வாக்குகளுக்காகவும் தேர்தலுக்காகவும் என்னை மட்டுபடுத்தி கொள்பவள் அல்ல. என்னோடு பழகும் நண்பர்களுக்கும், அண்ணன், தம்பிமார்களுக்கும், அக்கா தங்கைமார்களுக்கும் இது தெரியும்.

எனது கொள்கைகளை பற்றியும் எதிர்கால மலையகத்தை பற்றிய எனது கனவுகளை பற்றி தெரிந்தவர்களும் மக்களுக்கான மலையக குரலாய் என்னை ஏற்பவர்களும், என் தந்தையின் சேவைகளில் பலன் கண்ட மக்களும், நான் மக்களின் பிரதிநிதியாக வேண்டும் என எண்ணுபவர்கள் எனக்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள், அனைத்து மலையக மக்களும் என்னை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு சேவை செய்வேன்.

ஒரு சிலர் எனது செயற்பாடுகளை அரசியல் நோக்கமுடையது என நினைத்தாலும் நான் கட்சி, அரசியல், வாக்குகள் என்பவற்றிற்கு அப்பால் மனிதத்தை போற்றுபவள் என்பது என்னை புரிந்தவர்களுக்கும் நான் உதவியவர்களுக்கும் தெரியும்.

ஒருவர் கஷ்டம் என்று வந்தால் என் சக்திகேற்ப உதவ முயற்சிப்பேனே தவிர அவர் எந்த அமைப்பைச் சார்ந்தவர் என்று இதுவரையிலும் விசாரித்ததில்லை.

என் அரசியல் செயற்பாடுகளை என் தந்தைக்காற்றும் கடமையாகவே நான் பார்க்கிறேன். எனது தந்தை எங்களுடன் வீட்டிலிருந்த காலங்களை விட மக்களோடு இருந்த நேரம்தான் அதிகம். இறுதிவரையிலும் மக்களுக்காகவே உழைத்தார்.

35000 ற்கும், மேற்பட்ட தனி வீடுகளை அமைத்தும் அவர் இறக்கும் போது எங்களுக்கென்று சொந்தமாய் ஒரு வீட்டை கூட கட்டி வைக்கவில்லை.

பல இழப்புகளை, தியாகங்களை சந்தித்து திரும்பினால் தந்தை உருவகித்த கட்சியின் போக்கை சகிக்க முடியவில்லை. மக்கள் அல்லலுறுவது வேதனையளித்தது. இதுவே நான் தேர்தலில் களம் இறங்க காரணம்.

அரசியல் செயற்பாடுகளிலும், மக்கள் சேவையிலும் அவசரம் என்ற வார்த்தைக்கோ பொறுமை என்ற பேச்சுக்கோ இடமில்லை, குரலில் செயற்பாடுகளில் செயலில் உண்மை இருக்கிறதா வேகம் இருக்கிறதா விவேகம் இருக்கிறதா என்பதுவே முக்கியம்.

"மக்களுக்கு தேவையான சந்தர்ப்பத்தில் தந்தையின் குரலாய் ஒலிப்பேன், நான் இம்முறை தேர்தலில் எம்மக்களின் தனித்துவத்தை நிரூபிப்பேன். இன்னும் சொன்னால் சந்திரசேகரனின் மகள் என்பதை சமூகம் ஏற்கச் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment