ஜூன் 08 முதல் நாடு முழுவதும் போக்குவரத்து வழமைக்கு - சுற்றுலா, மாணவர் போக்குவரத்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடிவு - தொடர்ந்தும் பாதுகாப்புப் பிரிவின் உதவி பெறப்படும் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 2, 2020

ஜூன் 08 முதல் நாடு முழுவதும் போக்குவரத்து வழமைக்கு - சுற்றுலா, மாணவர் போக்குவரத்து பஸ்களை சேவையில் ஈடுபடுத்த முடிவு - தொடர்ந்தும் பாதுகாப்புப் பிரிவின் உதவி பெறப்படும்

தற்போதைய பொதுமக்களின் நடத்தைகளை அவதானித்து, சுகாதாரப் பிரிவினால் வழங்கப்படும் ஆலோசனைகளைக் கவனத்தில் கொண்டு, எதிர்வரும் ஜூன் 08ஆம் திகதி முதல் நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று (02) போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சில், அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆசன எண்ணிக்கை பிரச்சினையை கருத்திற் கொண்டு, தனியார் பஸ்கள், இ.போ.ச. பஸ்களை அதிகளவில் பயன்படுத்தவும், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் சுற்றுலா பஸ்களை தற்காலிகமாக போக்குவரத்தில் ஈடுபடுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த பஸ்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையில் தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கை நாளை முதல் இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதற்கமைய அங்கு எடுக்கப்பட்ட முடிவின்படி, எதிர்வரும் திங்கட்கிழமை (08) பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் இயல்பான செயல்பாட்டை மேற்கொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள், பிரச்சினைகள், சவால்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக, அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது, சுமார் 5,300 இ.போ.ச. பஸ்கள் மற்றும் 23,000 தனியார் பஸ்கள் காணப்படுகின்ற போதிலும், இது பயணிகள் போக்குவரத்துக்கு ஒருபோதும் போதுமானதாக இல்லை என்பதால், பயணிகள் இருக்கைகள் இல்லாமல் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர இதன்போது சுட்டிக் காட்டினார். 

ஆயினும் கொவிட்-19 நிலைமையில் இருக்கைகளின் எண்ணிக்கைக்கு அமைய போக்குவரத்து கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே வழமையான வகையில் பொதுப் போக்குவரத்தை மேற்கொள்ளும்போது பல்வேறு சிக்கல்கள் எழுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், தனியார் பஸ்கள், இ.போ.ச. பஸ்களை உச்ச அளவில் பயன்படுத்துவதோடு, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் சுற்றுலாப் பயணங்களில் ஈடுபடும் பஸ்களை தற்காலிகமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தவும், போக்குவரத்திற்காக பதிவு செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள பஸ்களையும் சேவையில் ஈடுபடுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக குறித்த பஸ்களை, நாளை (03) முதல் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையில் தற்காலிகமாக பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெறும் என அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், ஒரு நாளைக்கு சுமார் 147,000 பேர் போக்குவரத்தில் ஈடுபடுவதோடு, புகையிரதத்தில் 25,000 இற்கும் குறைவான ஆசனங்களே உள்ளன. ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பொதுப் போக்குவரத்து இடம்பெறுவதால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தும்போது, தங்கள் பயணங்களை முடிந்தவரை குறைக்குமாறும் அத்தியாவசிய தேவைக்கு மாத்திரம் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், சுகாதாரத் துறையின் உத்தரவுக்கு அமைய, தற்போது பொதுமக்களின் நடத்தை மற்றும் கொவிட்-19 நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் எனவும், அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

தற்போது எமது நாட்டில் கொவிட்-19 நிலைமை குறைவடையவில்லை என்பதால், சுகாதாரத் துறை வழங்கும் வழிகாட்டல்களை தவறாமல் பின்பற்ற வேண்டுமென, அனைத்து போக்குவரத்து பிரிவினருக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

போக்குவரத்து வசதிகளை வழங்கும்போது, பாதுகாப்புப் பிரிவின் உதவி தொடர்ந்தும் பெற்றுக் கொள்ளப்படும் என அமைச்சர் சுட்டிக்க் காட்டினார்.

No comments:

Post a Comment