இவ்வருடத்தின் ஜூன் மாதம் முதலாம் திகதி வரையான காலப்பகுதி வரை, எலிக் காய்ச்சல் காரணமாக, 10 உயிரிழப்புகள் சம்பவித்துள்ளதோடு, 2,198 பேர் இந்நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 558 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக, தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி, பெப்ரவரி, மே மாதங்களில் அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, கடந்த மே மாதத்தில் ஆகக்கூடுதலாக 741 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். களுத்துறை மாவட்டத்தில் 232 நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, காலி மாவட்டத்தில் 201 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த வருடத்தில் (2019) நாடு முழுவதும் 6,021 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆகக்கூடுதலாக 1,245 பேர் பதிவாகியுள்ளதோடு, கடந்த வருடம் ஆகக்கூடுதலாக நவம்பர் மாதத்தில் 1,036 பேர் பதிவாகியிருந்தனர்.
விவசாயிகள், கால்வாய்களை சுத்தம் செய்பவர்கள், சுரங்கங்கள், சதுப்பு நிலங்கள், கால்வாய்களில் பணியாற்றுபவர்கள், அசுத்த நீரில் நீந்துபவர்கள் அல்லது விளையாடுபவர்கள் அருகிலுள்ள பொதுச் சுகாதார அதிகாரி பணிமனை அல்லது, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையை நாட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெட்டுக்காயங்கள், புண்கள், வாய், மூக்கு, கண்கள் மூலமாக வைரஸ் உடலினுள் உட்புகுகின்றது. எலிக்காய்ச்சலுக்குரிய பிரதான அறிகுறிகளாக திடீரென அதிக காய்ச்சல், இலேசான காய்ச்சல், குளிர், கடுமையான தலைவலி, சிறுநீர் கழித்தல் குறைதல் உள்ளிட்டவை காணப்படுகின்றன.
உரிய தருணத்தில் சிகிச்சை பெற்றால், இந்நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. ஆனால், இந்நோயின் கடைசிக் கட்டத்தில் இருதய செயலிழப்பு உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றுவதுடன், உயிரைக் காப்பாற்றுவது கடினமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment