கண்டி, திகன வன்முறை சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு : முஜிபுர் ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

கண்டி, திகன வன்முறை சூத்திரதாரிகளை சட்டத்தின்முன் நிறுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு : முஜிபுர் ரஹ்மான்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

திகன, கண்டி பிரதேசங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற இனவாத மதவாத வன்முறைகளின் சூத்திரதாரிகளை சட்டத்துக்கு முன் நிறுத்தும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது. விசாரணைகளில் அரசியல் தலையீடுகள் இருக்குமாயின் எதிர்காலத்தில் நாடு பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

கண்டி, திகன, தெல்னிய சம்பவங்களுக்கு முகப்புத்தகம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் காரணமாக இருந்தமை விசாரணைகளில் தெரிய வந்ததையடுத்து, ஃபேஸ்புக் நிறுவனம் கடந்த வாரம் மன்னிப்பு கோரியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், திகன, தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு காரணமானவர்கள் பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. குறித்த வழக்குகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. 

அத்துடன் ஃபேஸ்புக் ஊடாக இந்த வன்முறை பிரசாரங்களை மேற்கொண்டவர்களை இனம் காண முடியும். சம்பவத்துக்கு காரணமானவர்களின் பெயர்ப்பட்டியல் ஃபேஸ்புக் நிறுவனத்திடம் இருக்கின்றது. அதனை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது. 

இந்த சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்டவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த வன்முறைகளுக்கு ஃபேஸ்புக் ஊடாக இனவாத வைராக்கிய பிரசாரங்களை மேற்கொண்டு உதவியாக இருந்தவர்களை பேஸ்புக் நிறுவனம் இனம் கண்டுள்ளது. அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது. 

மேலும் இந்த வன்முறை சம்பவம் எமது அரசாங்க காலத்தில் இடம்பெற்ற போது அன்று எதிர்க்கட்சியில் இருந்தவர்கள் இந்த சம்பவத்துக்கு பின்னணியாக இருந்தவர்கள் ஒருசிலரின் பெயர்களை குறிப்பிட்டிருந்தனர். இவ்வாறு குற்றம் சாட்டியவர்கள் தற்போது அரச அதிகாரத்தை பெற்றுள்ளனர். சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு எதிரான வழக்குகள் தற்போதும் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கின்றது. 

எனவே பத்தொன்பதாம் திருத்தத்தின் ஊடாக நாங்கள் மேற்கொண்ட சுயாதீன நீதிமன்றம் தொடர்ந்து செயற்பட்டு வருவதனால் தொடுக்கப்பட்ட வழக்குகள் அவ்வாறே இடம்பெறும் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. என்றாலும் இதன் பொறுப்பு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு இருக்கின்றது. 

சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த வன்முறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இருந்தபோதும் இந்த வழக்கு விசாரணைகளுக்கு அரசியல் தலையீடுகள் இடம்பெற்றால் வன்முறையாளர்கள் எதிர்காலத்திலும் நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment