'இம்மாதம் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது' - இன்னும் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையென்கிறது தொற்று நோய் தடுப்பு பிரிவு - News View

About Us

About Us

Breaking

Friday, May 1, 2020

'இம்மாதம் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது' - இன்னும் தொற்று நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லையென்கிறது தொற்று நோய் தடுப்பு பிரிவு

(ஆர்.யசி) 

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கமானது நாட்டில் பூச்சியத்தை அடையவில்லை. அடுத்த வாரங்களில் நிலைமை சுமுக நிலைமைக்கு மாறப்போவதில்லை என அறிவுறுத்தும் தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் அசித திசேரா இம்மாதத்தில் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியாது. அவ்வாறு ஆரம்பிப்பதன் மூலமாக மாணவர்களை அதிகம் நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலின் தாக்கம் மற்றும் தற்போதைய நிலவரம் குறித்து தெரிவிக்கையில் அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் என கூறப்படும் இந்த கொவிட்-19 வைரஸ் என்பது எம் அனைவருக்கும் தெரியவந்துள்ள புதிய நோயாகும். இதற்கு முன்னர் நாம் அறிந்துகொண்ட, எதிர்கொண்ட நோய்களில் கொவிட்-19 முற்றிலும் மாறுபட்ட தொற்று நோயாகும். 

உலகிற்கே கொவிட்-19 வைரஸ் பற்றி நான்கு மாத கால அனுபவமே உள்ளது. இந்த நான்கு மாதங்களில் எவ்வாறான தாக்கங்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளது என்பதை பார்த்து அதற்கு ஏற்றால் போலவே இப்போது வரையில் எமது முன்மொழிவுகள் அமைந்துள்ளது. 

முழு உலகிலும் இப்போது வரையில் 30 இலட்சத்திற்கு அதிகமான மக்கள் கொவிட் நோயாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிலும் இரண்டரை இலட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே 7 சதவீதமான மக்கள் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகின்றது. 

இலங்கையை பொறுத்தவரையில் உலகின் நிலைமையினை விட மாறுபட்ட விளைவுகளையே காட்டுகின்றது. அதற்கு இலங்கையின் அமைவிடம் மற்றும் காலநிலை ஒரு காரணமாக அமைந்திருக்கலாம். எவ்வாறு இருப்பினும் கடந்த காலங்களை விடவும் இறுதி ஒருவார காலத்தில் நோய் தொற்றாளர்களை கண்டறியும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக சமூக பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என்பது உண்மையே. 

ஆனால் இலங்கையில் இன்னமும் கொவிட்-19 வைரஸ் தொற்றுப்பரவல் பூச்சியமாக மாறவில்லை என்பதை கூறிக் கொள்கின்றோம். அடுத்த வாரமளவில் நாட்டில் கொவிட்-19 தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை பூச்சியமாக மாறவும் முடியாது. தொடர்ந்தும் தொற்று நோய் அச்சம் உள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்த எவ்வாறான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை அனைவரும் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும். 

அதேபோல் இம்மாதம் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதிலும் சிக்கல்கள் இருப்பதாக நாம் கருதுகின்றோம். பொதுவாக மாணவர்களுக்கு நோய் தாக்கத்தின் அறிகுறிகள் மிகவும் குறைவாகவே வெளிப்படுத்தும். அவ்வாறு இருக்கையில் மாணவர்கள் இடையில் ஏதேனும் நோய் பரவல் ஆரம்பித்தால் அது மிகப்பெரிய தாக்கமொன்றை உருவாக்கும். 

ஆகவே பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் நோய் தடுப்புக்கான விசேட வேலைத்திட்டமொன்றை உருவாக்க வேண்டியுள்ளது. இம்மாதம் பாடசாலைகளை ஆரம்பிக்க எந்த ஆயதங்களும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே இம்மாதமளவில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதில் மேலும் சிந்திக்க வேண்டியுள்ளது என்றார். 

No comments:

Post a Comment