இலங்கைக்கு வர வேண்டும் என்றால் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுப்பதில் அர்த்தமில்லை, தூதரகங்களை தொடர்புகொண்டு கோரிக்கையை முன்வையுங்கள் - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

இலங்கைக்கு வர வேண்டும் என்றால் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுப்பதில் அர்த்தமில்லை, தூதரகங்களை தொடர்புகொண்டு கோரிக்கையை முன்வையுங்கள்

(ஆர்.யசி) 

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டிற்கு வர வேண்டும் என்றால் அரசாங்கத்திற்கு அறிவிப்பதில் அர்த்தமில்லை. அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களில் அறிவித்தல் விடுங்கள், சீஷெல்ஸ் நாட்டில் இருந்து தனிப்பட்ட தேவைகளுக்காக எவரையும் இலங்கைக்குள் அனுமதிக்கவில்லை. வந்தவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்காக வந்தவர்கள் எனவும் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது, இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவது குறித்து பல கோரிக்கைகள் முன்வக்கப்பட்டு வருகின்றனர். இதில் குவைத் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் மூலமாக நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமையொன்று உருவாகியுள்ளது. 

கொவிட்-19 சமூக பரவலாக மாறாது தடுத்த நாடாக உலக சுகாதார ஸ்தாபனமே அங்கீகாரத்தை வழங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து மாணவர்களையும், ஏனைய தொழிலாளர்களையும் வரவழைத்து எந்தவித நெருக்கடியையும் ஏற்படுத்தாத வகையில் செயற்பட்டு வரும் நாடாக நாம் உள்ள நிலையில் இப்போது சில நெருக்கடிகள் உருவாக்கி வருகின்றது. 

நாட்டிற்கு வரவழைக்கும் அனைவரையும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு அதிகளவிலான இடங்கள் தேவைப்படுகின்றது. இப்போதே பல இடங்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் இன்றும் நோயாளர்கள் உள்ளனர். இந்நிலையில் குவைத்தில் இருந்து வருபவர்களின் பலர் கொவிட் நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். அவர்களை முறையாக கையாள வேண்டும். 

அதுமட்டும் அல்ல வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வர விரும்பும் நபர்கள் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுப்பதில் அர்த்தமில்லை. அந்தந்த நாடுகளில் உள்ள தூதரகங்களை தொடர்புகொண்டு உங்களின் கோரிக்கையை முன்வையுங்கள், அவர்கள் சகலரதும் கோரிக்கைக்கு செவிமடுப்பார்கள். அவர்களில் யாருக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பது அவர்களே தீர்மானம் எடுப்பார்கள். 

மேலும் சீஷெல்ஸ் நாட்டில் இருந்து 35 பேரை அரசாங்கம் வரவளைத்துள்ளதாக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அவ்வாறு ஒருவரை கூட அரசாங்கம் சீசெல்ஸ் நாட்டில் இருந்து அழைத்துவரவில்லை. ஆனால் சீஷெல்ஸ் மற்றும் இலங்கை நாடுகளின் மிக நீண்டகால உடன்படிக்கைக்கு அமைய சீசெல்ஸ் நாட்டின் நோயாளர்கள் இலங்கையின் தனியார் வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே தனிப்பட்ட விமான சேவையில் 35 பேர் மருத்துவ சிகிச்சைகளுக்காக வந்துள்ளனர். அவர்கள் வேறு எந்த நோக்கத்திற்காகவும் இலங்கைக்கு வரவில்லை. அவர்கள் 14 நாட்கள் மருத்துவமனையில் இருந்து மீண்டும் அவர்களின் நாட்டிற்கு சென்றுவிட்டனர் என்றார்.

No comments:

Post a Comment