நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும், ஆறுமுகன் தொண்டமானின் கனவு நனவாகும் - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, May 28, 2020

நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும், ஆறுமுகன் தொண்டமானின் கனவு நனவாகும் - அமைச்சர் பந்துல

(ஆர்.யசி) 

மலையகத்தின் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதே அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பிரதான நோக்கமாக இருந்தது. நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற அவரது கனவை நனவாக்கும் வகையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி தினத்தில் கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இதில் தீர்மானங்களை தெரிவிக்கும் போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற வேளையில் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறப்பை அடுத்து அமைச்சரவையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆறுமுகன் தொண்டமான் காலமாக சில மணி நேரம் முன்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் ஒரு சில பத்திரங்களை பிரதமரிடம் கையளித்து மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்.

குறிப்பாக மலையக மக்களின் பிரதான பிரச்சினையாக இருந்து வருகின்ற ஆயிரம் ரூபாய் பிரச்சினைக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுப்பது குறித்தும், தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி விடயங்கள் குறித்தெல்லாம் கலந்துரையாடியுள்ளதுடன், மலையக அரசியல் நிலைமைகள் மற்றும் தோட்டப்புற மக்களுக்கான வீட்டுத்திட்டம், கல்வி, சுகாதார நலன்களை எல்லாம் பேசிவிட்டு அவரது வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்த போதே மரணித்துள்ளார்.

இன ஒற்றுமையை பலப்படுத்துவதிலும் தொழிலாளர்களின் உரிமைக்காகவும் அவர்களின் குரலாக செயற்பட்ட தலைவராகவே நாம் அவரை பார்த்தோம். அவரை நீண்ட காலமாக எமக்கு தெரியும். புதிய அரசாங்கத்தில் அவரிடம் இருந்த ஒரே நோக்கம் நுவரெலியாவில் பல்கலைக்கழகம் ஒன்றினை உருவாக்க வேண்டும் என்பதேயாகும்.

ஜனாதிபதியிடம் அவர் இது குறித்து பேசியிருந்தார். என்னிடமும் அவர் இது குறித்து பேசினார். நாம் ஒருமுறை அப்பகுதிக்கு சென்று கொட்டகலை கல்லூரியை தொழில் பயிற்சி கல்லூரியாக தெரிவு செய்தோம். அதன் பின்னர் சந்ததன்ன, அம்பேவலை, கொட்டகலையில் என மூன்று பிரதேசங்களை தெரிவு செய்து பல்கலைக்கழகங்களை உருவாக்க நாம் தீர்மானம் எடுத்தோம். அதற்கான நிதி ஒதுக்கீடு அமைச்சரவை பத்திரம் கூட அடுத்த வாரம் அமைச்சரவைக்கு கொண்டுவரப்படுகின்றது.

மலையக கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பது அவரது கனவு. எனவே அவரது மரணம் நிகழ்ந்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலியின் போது கொட்டகலை தேசிய பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்படும். அவரது கனவை நனவாக்க அரசாங்கம் சகல நடவடிக்கையும் முன்னெடுக்கும். அவர் முன்னெடுத்த தேசிய வேலைத்திட்டம் தமிழ் மக்களுக்காக மட்டுமல்ல நாட்டில் சகல மக்களின் மனங்களிலும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment