(எம்.மனோசித்ரா)
ஜூன் மாதம் 2 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாராளுமன்றத்தைக் கூட்ட வேண்டும். ஜனநாயக நாடொன்றில் 6 மாதங்கள் பாராளுமன்றம் இன்றி ஆட்சி செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க கூறியிருப்பதைப் போன்று தனிமைப்படுத்தல் கட்டளை சட்டத்தை பலப்படுத்த பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது, சுகாதாரத் துறையினரால் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு சுமார் 75 நாட்கள் தேவைப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். அவ்வாறெனில் ஆகஸ்ட் மாதமளவிலேயே தேர்தல் நடத்தப்படும். அது வரையில் பாராளுமன்றத்தை கூட்டாமலிருக்க முடியாது.
6 மாதங்களுக்கு பாராளுமன்றத்தை கூட்டாமலிருக்க முடியாது. ஆட்சியை நடத்துவதற்கு 3 பிரதான காரணிகள் உள்ளன. நிறைவேற்றதிகாரம், அரசியலமைப்பு சபை மற்றும் நீதிமன்றம் ஆகியனவாகும். இவற்றில் அரசியலமைப்பு சபை இன்றி அரசாங்கத்தைக் கொண்டு செல்ல முடியாது.
ஜனநாயக நாடொன்றில் 6 மாதங்கள் பாராளுமன்றம் இன்றி ஆட்சி செய்ய முடியாது. எனவேதான் இது தொடர்பில் தற்போது நீதிமன்றமும் விசாரித்துக் கொண்டிருக்கிறது. எனவே ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.
இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டியவராவார். அரசியலமைப்பின் 4 (உ) உறுப்புரைக்கு அமைய மக்களின் நீதித்துறை அதிகாரம் பாராளுமன்றத்தின் மூலம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
சில நீதித்துறை நிபுணர்கள் நாட்டில் பாராளுமன்றம் மரணித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு பாராளுமன்றம் மரணிக்கவில்லை. ஆனார் உறங்கிக் கொண்டிருக்கிறது. 6 மாதங்கள் பாராளுமன்றம் இன்றி ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால் நாம் ஏகாதிபத்திய ஆட்சியிலேயே இருக்கின்றோம்.
எனவே ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கூட்டி ஒரு வார காலமாவது வைத்திருந்து அதன் பின்னர் மீண்டும் வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதியால் வெளியிட முடியும். தேர்தலுக்கான நடவடிக்கைகளை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய ஆரம்பிக்க முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்திருக்கிறார்.
அதாவது, வாக்களிப்பு நிலையங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் அதிகாரிகள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்ற விடயங்களை ஆரம்பிக்குமாறே அவர் கூறியுள்ளார். ஆனால் வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்டத்துக்கு சென்றால் தேர்தல் மாத்திரமல்ல. எதனையும் நடத்த முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்தோடு தனிமைப்படுத்தல் சட்டத்தை வலுப்படுத்துமாறும் அதற்கு பாராளுமன்றம் அவசியமானதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார் என்றார்.
No comments:
Post a Comment