(இராஜதுரை ஹஷான்)
மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும். சுகாதார பாதுகாப்பு நிமித்தம் தற்போது பின்பற்றப்படும் நடவடிக்கைகளை அனைவரும் பின்பற்றுவது அவசியமாகும் என பிவிதுறு ஹெல உறுமய அமைப்பின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதில் அரசாங்கம் பொறுப்பற்ற விதமாக செயற்படுவதாக எதிர்த்தரப்பினர் குற்றம் சாட்டுகின்றார்கள். அரசியல் நோக்கத்தை கருத்திற்கொண்டே ஐக்கிய தேசிய கட்சியினர் அரசாங்கத்துக்கு எதிராக விமர்சிக்கினரறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் போது உரிய நடவடிக்கையினை சுகாதார தரப்பினர் முன்னெடுப்பது அவசியமாகும். குவைத் நாட்டில் இருந்து வந்த இலங்கையர்கள் அதிகளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இதன் பிறகே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டுக்கு அழைத்து வருபவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பு நடவடிக்கைக்கு உட்படத்தப்பட வேண்டும். கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ள இலங்கையர்கள் அனைவரும் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள். இது அரசாங்கத்தின் கொள்கையாகவும் காணப்படுகின்றது.
காலஞ்சென்ற அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியைகள் சுகாதார தரப்பினரது அறிவுறுத்தல்களுக்கு அமையவே முன்னெடுக்கப்படும். மக்கள் ஒன்று கூடுவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கபடமாட்டாது. கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். என்றார்.
No comments:
Post a Comment