ஈழம் என்பது இலங்கையின் பூர்வீகப் பெயர்தான் : இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதுவரின் கருத்து தொடர்பில் கலாநிதி ஜனகன் அறிக்கை - News View

Breaking

Post Top Ad

Sunday, May 17, 2020

ஈழம் என்பது இலங்கையின் பூர்வீகப் பெயர்தான் : இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதுவரின் கருத்து தொடர்பில் கலாநிதி ஜனகன் அறிக்கை

“இலங்கையை ஈழம் என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை, இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவருகிறது. இதற்கான பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன” என ஜனநாயக மக்கள் முன்னணியின் அமைப்புச் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், கல்விமானுமான கலாநிதி வி.ஜனகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழம் என்பது, இலங்கையின் பூர்வீகப் பெயரல்ல என்று, இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதுவர் வௌியிட்டுள்ள கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே கலாநிதி ஜனகன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளவையாவன “இந்த அரசாங்கம் இனங்களிடையே ஒரு சுமூகமான உறவை ஏற்படுத்தும் வகையில் செயற்படவில்லை என்பது அண்மைக்கால பல செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதன் தொடர்ச்சியாக மே 15ஆம் திகதி, இலண்டனிலுள்ள The Guardian சஞ்சிகையில் வந்துள்ள Travel Quiz பகுதியில் அமைத்திருந்த இரண்டாவது கேள்வி “Eelam is an indigenous name for which popular holiday Island? (ஈழம் என்ற பூர்வீகப் பெயர்கொண்ட, பிரபலமான சுற்றுலாத் தீவு எது?)” இந்த கேள்வியில் மேலதிக விளக்கமாக இந்தத் தீவில் இடம்பெற்ற அண்மைக்கால இராணுவ கிளர்ச்சியானது LTTE எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.

“இதனைப் பார்த்த அரசாங்கம் உடனடியாக அதற்குக் கண்டனம் தெரிவித்தும், அந்தக் கேள்வியை நீக்க வேண்டும் எனவும் மேற்படி சஞ்சிகைக்குக் கடிதம் மூலம் அறிவித்து, அந்தக் கேள்வியை நீக்கியுள்ளார்கள்.

“இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் “தமிழ் ஈழம்” என்பதற்காகப் போராடினார்களே தவிர, மொத்த ஈழமும் வேண்டும் என்று போராட ஆராம்பிக்கவில்லை என்பதை அரசு மறந்துவிட்டதா அல்லது மறைக்கின்றதா?

“இலங்கையை ஈழம் என்று 1976ஆம் ஆண்டில் இருந்து குறிப்பிடவில்லை, இற்றைக்கு 2000 ஆண்டுகளாக அழைக்கப்பட்டுவருகிறது. இதற்கான பல வரலாற்று ஆதாரங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகள் உள்ளன. முக்கியமாக தமிழ் இலக்கிய நூலில் ஒன்றான பட்டினப்பாலையில் “ஈழ உணவு” எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ள பல நூறு கல்வெட்டுகளில் இந்த ‘ஈழம்’ என்ற சொல் இருப்பதற்கான வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன. கி.மு 11இல் இருந்து இலங்கையில் உள்ள பல்வேறு கல்வெட்டுகளில் இந்தப் பெயரைப் பார்க்க முடியும். உதாரணமாக அநுராதபுர மாவட்டத்தில் உள்ள அபயகிரி விகாரைக்கு அருகில் உள்ள கல்வெட்டில் “ஈழம்” என்ற பெயர் கி.மு 2 நூற்றாண்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

“இலங்கைக்கு ‘இரத்தின புரம்’ என்ற பெயரும் ‘தாப்பிரபரணி’ என்ற பெயர்களும் இருந்துள்ளன. ஈழம் என்ற பெயர் இந்த நாட்டில் அதிகமாக தென்னை வளமும் பனை வளமும் நிறைந்து காணப்படுவதால் வந்த பெயராகும் என பல வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

“LTTE அமைப்பானது நாட்டில் இருந்து அகற்றப்பட்டு ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்கள் ஏனைய சமூகங்களுடன் ஒற்றுமையாக இலங்கையாராக வாழந்து வருகிறார்கள். இந்த வேளையில் ஒரு சர்வதேச சஞ்சிகை தனது ஆக்கம் ஒன்றில் LTTE இன் பெயரை குறிப்பிட்டு இருப்பது அப் பத்திரிகையின் சுதந்திரம். ஆனால் எவ்வாறு உள் நாட்டு பத்திரிகை சுதந்திரத்தில் கை வைப்பது போல் சர்வதேச பத்திரிகை சுதந்திரத்திலும் அரசு கை வைத்து வெற்றி கண்டுள்ளது என்றே சொல்ல முடியும். ஏன் பயங்கரவாத அமைப்பாக அடையாளப்படுத்தப்பட்ட அமைப்புகளின் பெயர்களைப் பத்திரிகைகள் பதிவிடுவதில் என்ன சட்டப் பிரச்சினை உள்ளது.

“அமரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல் நடாத்திய அல்கொய்தாவைப் பற்றியும் ஏன், ISIS அமைப்பைப் பற்றியும் பல பத்திரிகைகள், நாடுகளுடன் சம்பந்தப்படுத்திக் கூறுவது அவர்களுடைய ஊடக சுதந்திரம். இதனை எவ்வாறு தடை செய்ய முடியும்? The Guardian சஞ்சிகை இந்தப் பதிவை நீக்கியதனூடாக தங்களுடைய ஊடக சுதந்திரத்தை தாங்களே விட்டுக்கொடுத்து உள்ளவர்கள் என்பதே உண்மை.

“முடிந்த விடயங்களைப் பற்றி மீண்டும் மீண்டும் பேசுவதை விட, எதிர்கால விடயங்களை நோக்கி எல்லோரும் சேர்ந்து பயணிக்க வேண்டும் என நான் கூறவில்லை, இந்த நாட்டின் ஜனாதிபதி தனது தேர்தல் பிரசாரங்களில் கூறி இருந்தார். அந்த அடிப்படையில் மீண்டும் மீண்டும் முடிந்து போன LTTE அமைப்பு தொடர்பான விடயங்கள் பற்றி ஊடகங்களில் வரும் விடயங்களுக்கு அரசாங்கம் அவதிப்பட்டு வழங்கும் எதிர்வினைகள், இனங்களுக்கு இடையிலான ஒரு சுமூகமான உறவினையே பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டும்” என கலாநிதி ஜனகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad