நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரிய பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம் - அஞ்சலி நிகழ்வுக்கு அனுமதி - News View

About Us

About Us

Breaking

Sunday, May 17, 2020

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரிய பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்த நீதிமன்றம் - அஞ்சலி நிகழ்வுக்கு அனுமதி

முள்ளிவாய்க்கால், நினைகூரல் நிகழ்வுகளுக்குத் தடைகோரி பொலிஸார் தாக்கல் செய்த விண்ணப்பத்தை நிராகரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர்போல், தனிமைப்படுத்தல் சட்டத்தை மதித்து நிகழ்வுகளை நடத்துவதற்கு அனுமதியளித்தார்.

அத்தோடு பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதி வரை நீதிவான் ஒத்தி வைத்தார்.

“யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. முள்ளிவாய்க்கால் நினைகூரல் தினமான நாளையும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்டு அந்த நிகழ்வுகளை நடத்தத் தடை உத்தரவு வழங்க வேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ விண்ணப்பம் செய்தார்.

இந்த விண்ணப்பத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர், சட்டத்தரணிகள் நடராசா காண்டீபன், விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரட்ணம் சுகாஷ் மற்றும் வரதராசா பார்த்திபன், வாசுகி, கிருபாகரன், தனுஷன், விஷ்ணுகாந்த் மற்றும் தமிழ்மதி ஆகிய 11 பேரின் பெயர்கள் இடப்பட்டு அவர்கள் நிகழ்வை நடத்தத் தடை உத்தரவு வழங்குமாறு கோரப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் விண்ணப்பத்தை பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.

விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட 11 பேரும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மதிக்காது நபர்களை ஒன்றுதிரட்டி அஞ்சலி நிகழ்வுகளை நடத்துகின்றனர் என்று காணொளி பதிவுகளை பொலிஸார் சமர்ப்பித்தனர்.

அதில் மேலும், “நாம் அவர்களை சமூக இடைவெளியைப் பேணுமாறு கேட்டுக்கொண்டால், எம்மை நீதிமன்றம் செல்லுமாறும் தாம் நீதிமன்றில் எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர். எனவே தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்டு நாளைய தினம் ஒன்றுதிரண்டு அஞ்சலி நிகழ்வுகளை நடத்த தடை உத்தரவிட வேண்டும்” என்று பொலிஸார் சமர்ப்பணம் செய்தனர்.

பொலிஸாரின் சமர்ப்பணத்தை ஆராய்ந்த நீதிவான், தனிமைப்படுத்தல் சட்டத்தை கடைபிடித்து அஞ்சலி நிகழ்வுகளை நடத்த அனுமதியளிக்க உத்தரவிட்டார். அத்துடன், பொலிஸாரின் விண்ணப்பத்தை வரும் 30ஆம் திகதிவரை நீதிவான் ஒத்தி வைத்தார்.

No comments:

Post a Comment