நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் இருந்து வழமையான மாற்றம் ஏற்படும் வரை மாணவர்களுக்கான இடர்கால மாற்றுவழிக் கல்வி வழங்கல் முறையை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் முன்னெடுக்குமாறு கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவிடம் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் இரா.புவனேஸ்வரன் கல்வி அமைச்சிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி எமது நாட்டையும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா எனும் கொடிய நோயானது இன்னும் எம்மைவிட்டு விலகவில்லை என்பதற்கு தற்போது ஆயிரத்தை தாண்டியதாக தொற்றாளர் எண்ணிக்கை சுட்டி நிற்கின்றது.
இது ஒரு தொற்று நோய். இதனைத் தடுப்பதற்கான வழிமுறைகளில் உலக நாடுகள்கூட தடுமாறி நிற்கின்றன. இந்நிலையில் உலகம் முழுவதும் பல இலட்சம் மாணவர்களின் கல்வி பாதிப்படைந்துள்ளது. அவர்களின் பரீட்சைகள், அடுத்தடுத்ததான படி நிலைகள் எல்லாமே கேள்விக்குறியாகியுள்ளது. இது எதிர்கால சந்ததியில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
அதேவேளை பாடசாலை செல்லும் மாணவர்கள் முழு நாளும் வீடுகளில் இருப்பதென்பது தொடர்ச்சியாக நெடுகாலம் சாத்தியப்படாத ஒன்று. இதனை மறுப்பதற்கும் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் தங்களின் அமைச்சு வெளியிடுகின்ற சுற்றறிக்கைகளும், தாங்கள் வெளியிடுகின்ற ஊடக அறிவித்தல்களும் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகின்றன.
சுற்றறிக்கைகளை பின்பற்றும் அதிகாரிகள் தொற்று நோயின் அதீதத்தை புரிந்து கொண்டு உங்களுக்கும், உங்கள் அமைச்சுக்கும் தமது கருத்துக்களை வழங்க வேண்டும். அல்லது உங்களின் ஊடக அறிக்கைகளையும் அனுசரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறு இல்லாமல் எள் என்றவுடன் எண்ணையைக் கையில் தரும் நிலையில் உள்ள சில அதிகாரிகள் தாம் சாதித்துக் காட்டுகின்றோம். என நினைப்பது பலரையும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும். பிள்ளைகளுக்கான கல்வி இழப்பு என்பதனை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பாரதூரமான விளைவுகளுக்கு பிள்ளைகளைத் தள்ளிவிடுவதற்கும் அனுமதிக்க முடியாது.
ஆகையால் பாடசாலைகளைத் தொடங்குவதற்கு ஆயத்தங்களைச் செய்யுங்கள் என்றோ, சமூக இடைவெளியை பயன்படுத்தி மேல்நிலை வகுப்புக்களை தொடங்கலாம் என்றோ செய்திகளை வெளியிடவேண்டாம். சமூக இடைவெளியில் மாணவர்களை வைத்திருப்பதென்பது எவராலும் முடியாத காரியம். இதனால் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளிகள் இன்னும் விகாரமடையும்.
உங்களது ஆயத்தம் செய்யுங்கள் என்ற அறிவித்தல் பலரிடத்தே அதிகாரத் தோரணையாக மாறி அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றது. பாடசாலை தொடங்குதல் என்ற முடிவு வருமாக இருந்தால் அதிபர், ஆசிரியர், பெற்றோர், மாணவர், பழைய மாணவர் என பலரின் பங்களிப்புடன் உடனடியாகத் தொடங்குவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த முடியும் என்பதால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் ஏதாவது மகிழ்ச்சியான மாற்றம் ஏற்படும் வரை மாணவர்களுக்கான இடர்க்கால மாற்றுவழி கல்வி வழங்கல் முறையை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் முறையாக பயனுள்ளதாக முன்னெடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம் என்றுள்ளது.
No comments:
Post a Comment