(எம்.மனோசித்ரா)
கலைக்கப்பட்டுள்ள பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, இவ்விடயத்தில் ஜனாதிபதிக்கு உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.
இன்று வெள்ளிக்கிழமை இராஜகிரியவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலால் நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மே 11 ஆம் திகதி தபால் மூல வாக்கெடுப்பினை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டிலேயே தேர்தல்கள் ஆணைக்குழு செயற்பட்டது. எனினும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையால் அது முடியாமல் போனது. எனவேதான் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்தாலோசித்து ஜூன் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்தது. அத்தோடு மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி தேர்தலுக்கு செல்லப் போவதில்லை என்பதே எமது நிலைப்பாடுமாகும்.
எனினும் நாட்டில் தேர்தல் நடத்தப்படுவதும் அத்தியாவசியமானதாகும். அரச நிதி முகாமைத்துவம் என்பவற்றில் இது தாக்கம் செலுத்தும். இதனை காரணமாகக் கூறி தற்போது பாராளுமன்றம் செயற்படுவது அத்தியாவசியமானதாகும் என்ற நிலைப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. எனினும் கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவது அநாவசியமானது. தற்போதுள்ள நிலைமை சீராக்கப்பட்டதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி புதிய பாராளுமன்றத்தினூடாக எம்மால் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும்.
அரசியலமைப்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய தேர்தலுக்கான திகதியை மேலும் நீடிக்க முடியும். இவ்விடயத்தில் அதாவது தேர்தல் தினம் தொடர்பான விடயத்தில் ஜனாதிபதி எந்த சந்தர்ப்பத்திலும் தலையிடவில்லை. மாறாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானங்களுக்கு மதிப்பளித்து செயற்பட்டார். எனவே தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தால் ஜனாதிபதிக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்க முடியாது.
சுமந்திரன் போன்றோர் இவ்விடயத்தில் ஜனாதிபதியை உள்நுழைக்க முயற்சிப்பார்களானால் இது முற்றிலும் சட்ட விரோதமானதாகும். மனித உரிமைகளுடன் தொடர்புபடுத்தியே சுமந்திரன் நீதிமன்றத்தை நாடவுள்ளார் என்று சட்டத்தரணி என்ற ரீதியில் நான் எண்ணுகின்றேன். எவ்வாறிருப்பினும் ஜனாதிபகிக்கு உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளால் பாராளுமன்றத்தில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியிருந்தன. எனவே பழைய பாராளுமன்றம் முக்கியமானதொன்றல்ல. 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி நீக்க வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடாக இருந்தது. இன்று நிதியுதவியளித்து ஒத்துழைக்க தயார் என்று கூறும் ஐக்கிய தேசிய கட்சி அன்று இடைக்கால வரவு செலவு திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்க தாயராக இருக்கவில்லை. கொரோனா ஒழிப்பிற்காக ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்டுள்ள அனைத்து வேலைத்திட்டங்களையும் தோல்வியடையச் செய்வதே ஐக்கிய தேசிய கட்சியின் நோக்கமாகும் என்றார்.
No comments:
Post a Comment