கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த காரணம் அரச புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பே - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண - News View

About Us

About Us

Breaking

Friday, April 3, 2020

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த காரணம் அரச புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பே - பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண

(எம்.மனோசித்ரா) 

வைரஸ் தொற்றுக்குள்ளானோரை இனங்காணுதல், அவர்களை சிகிச்சைக்குட்படுத்தல் மற்றும் அவர்களுடன் பழகிய குழுக்கள் தொடர்பில் ஆராய்தல் என்பவற்றில் அரச புலனாய்வுப் பிரிவினர் வழங்கிய ஒத்துழைப்பின் காரணமாகவே சமூகங்களுக்கிடையில் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடிந்ததாகவும், கொரோனா வைரஸ் தொற்று சமூகங்களுக்கிடையில் பரவுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று விசேட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை அவதானிக்கும் போது கடந்த ஜனவரி 01 ஆம் திகதி சீனப் பெண்னொருவர் முதலில் வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் இனங்காணப்பட்டார். அதனைத் தொடர்ந்து மார்ச் மாதம் 11 ஆம் திகதி இலங்கையில் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் இனங்காணப்பட்டார். 

அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டவர்கள் தொடர்பில் நாம் முக்கியமான தரவு பகுப்பாய்வினை முன்னெடுத்தோம். சில சந்தர்ப்பங்களில் ஒரே நேரத்தில் அதிகளவானவர்கள் ஏன் இனங்காணப்பட்டார்கள் என்று பொதுமக்கள் எண்ணக்கூடும். இதேபோன்று நாட்டின் ஏனைய பிரசேங்களிலும் வைரஸ் பரவல் அதிகரித்திருக்குமோ என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கும். 

வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதாரத் துறையினர் பாதுகாப்புத் துறையினர் உள்ளிட்டோர் பெரும் அர்ப்பணிப்புடன் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று இராணுவம் மற்றும் விமானப்படை என்பன தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நடவடிக்ககைகளில் நேரடியாகத் தொடர்புபட்டுள்ளன. கடற்படையுடம் இதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குகிறது. 

மேலும் சுய தனிமைப்படுத்தல்கள் தொடர்பில் பொலிஸார் நேரடியாக தமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றனர். அரச புலனாய்வுப் பிரிவினரும் இந்த சேவைகளில் பெரும்பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர் இனங்காணப்பட்டவுடன் அவருக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவருடன் நெருங்கிப்பழகிய குழு பற்றி ஆராயப்படுகிறது. பின்னர் அந்த குழுவுடன் பழகிய அடுத்த குழு பற்றி ஆராயப்படுகிறது. இதுவே அரச புலனாய்வு பிரிவினரால் ஆற்றப்படும் சேவையாகும். முதலாவது வைரஸ் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்ட நாள் முதல் தொடர்ந்தும் வெவ்வேறு பிதேசங்களிலும் தொற்றுக்குள்ளானோர் இனங்காணப்பட்டனர். 

குறிப்பாக மத்தேகொட, மாரவில, நுகேகொட, பேருவல, தெஹிவளை, கொழும்பு 8, குளியாபிட்டி, வென்னப்புவ, ஜாஎல, இரத்மலானை, அக்குரனை, நாத்தாண்டியா, கொழும்பு 11, அட்டலுகம, பண்டாரகம, புத்தளம், வெல்லம்பிட்டி, மீண்டும் பேருவலை மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களிலேயே வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களிடம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்புபட்டோர் இனங்காணப்பட்டனர். 

எனினும் தற்போது சமூகங்களுக்கிடையில் வைரஸ் பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று விசேட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த 19 பிரதேசங்களே வைரஸ் பரவலுடன் நேரடி தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. 

புலனாய்வுப் பிரிவினரின் சேவையின் காரணமாகவே சமூகங்களுக்கிடையில் வைரஸ் பரவல் தீவிரமடையாதளவிற்கு எம்மால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. எவ்வாறிருப்பினும் மேல் மாகாணம் மற்றும் கண்டி, புத்தளம், யாழ் மாவட்டங்களிலிருப்போர் தொடர்ந்தும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்பதோடு, அவர்கள் பழகும் குழுவினர் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment