(எம்.மனோசித்ரா)
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்களுக்கு தீர்வு காணும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்குதல், தொழிற்துறையைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் பொதுத் தேர்தல் உள்ளிட்ட 7 பிரதான விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் முன்னாள் சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரஸ் சவாலுக்கு முகங்கொடுப்பதற்காக எவ்வித பேதமும் இன்றி பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளினதும் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும்.
ஏற்பட்டுள்ள தேசிய பேரழிவிலிருந்து நாட்டு மக்களை மீட்ப்பதற்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதாரத்துறை ஊழியர்கள், முப்படையினர் மற்றும் பொலிஸ் உள்ளிட்ட ஏனைய அத்தியாவசிய துறையினருக்கும் பாராளுமன்றத்தின் அனைத்து கட்சிகள் சார்பிலும் கௌரவத்தையும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
அத்தோடு கீழ் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ள விடயங்களாவன:
மக்கள் வாழ்க்கையைப் பாதிக்கும் அடிப்படை பிரச்சினையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து பொருட்கள் என்பவை பகிர்ந்தளிக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்காக இதன் பின்னர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும்.
காணப்படும் நிலைமையில் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள தினம்தினம் தொழில் செய்து ஊதியம் பெற்று அதன் மூலம் குடும்பத்தைக் கொண்டு செல்பவர்களுக்கான நிவாரணம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
தனிமைப்படுத்தல் நடைமுறைக்களுடன் தொடர்புடைய பிழையற்ற தகவல்களை பெற்றுக் கொள்வதற்கும், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் பொலிஸ் சேவை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பினைப் பெற்றுக் கொள்ளல்.
உலகலாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சிக்கு முகங்கொடுப்பதில் ஜீ20 நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை போன்ற நாடுகள் மிகுந்த நெருக்கடிக்கு முகங்கொடுக்கக்கூடும். எனவே இவ்வாறான நிலைமைக்கு முகங்கொடுப்பதற்காக விசேட நிபுணத்துவம், நடைமுறை அறிவுடைய அரச மற்றும் தனியார் துறையினரை இணைத்து பொறிமுறையொன்றை ஸ்தாபிப்பதில் அவதானம் செலுத்த வேண்டும்.
சீனி, பால்மா, பாண் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் மருந்து உள்ளிட்ட ஏனைய இறக்குமதி செய்யப்படுபவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் அவதானம் செலுத்தல்.
உலக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் சென்று தொழில் புரியும் இலங்கை பிரஜைகளின் வேலை வாய்ப்புக்களிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்தோடு உள்நாட்டில் இறக்குமதி மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய வேலை வாய்ப்புக்களும் வீழ்ச்சியடைந்துள்ளன. இவை தொடர்பிலும் அவதானம் செலுத்துவதோடு இதற்கு தனியார் துறையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு தொழிலைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
எதிர்வரும் காலப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தவாறு பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருக்கிறது. இதற்கு மேற்கொள்ளக் கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்து அனைத்து கட்சிகளுடனும் கலந்தாலோசிக்க வேண்டும்.
தேசிய நெருக்கடியொன்று ஏற்பட்டுள்ள இவ்வாறான சந்தர்ப்பத்தில் அரசாங்கம் சகல கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கேட்டறிவதற்கு முன்வந்தமைக்கும், அதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
No comments:
Post a Comment