(லியோ நிரோஷ தர்ஷன்)
பாராளுமன்றத்தை கூட்டினால் எதிர்க் கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவார்கள் என அச்சத்தை வெளிப்படுத்திய ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு, நம்பிக்கையில்லா பிரேரனையை கொரோனா வைரஸிற்கு எதிராகவே கொண்டு வருவோம், அச்சம் வேண்டாம் என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இரண்டாவது தடவையாகவும் சர்வ கட்சி கூட்டம் நேற்று வியாழக்கிழமை முற்பகல் இடம்பெற்றது.
இதில் வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பாராளுமன்றத்தை கூட்டி தீர்வு காணுதல் மற்றும் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் நல்லடக்க விடயம் என்பன முக்கியத்துவம் பெற்றிருந்தன.
நாடு பாரிய சுகாதார நெருக்கடியை எதிர்க்கொண்டுள்ள நிலையில் விரைவாக பாராளுமன்றத்தை கூட்டி கலந்துரையாடப்பட வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த ஆளும் கட்சி உறுப்பினர்களான விமல் வீரவன்ச, விஜேதாச ராஜபக்ஷ மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பாராளுமன்றம் கூட்டப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டு வருவார்கள் என குறிப்பிட்டனர். ஆகவே இத்தருணத்தில் அவசரப்பட்டு பாராளுமன்றத்தை கூட்டிவிட வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக்கொண்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற இந்த கருத்து முரண்பாடுகளை அவதானித்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் தற்போதைய நிலைமையில் அரசாங்கத்திற்கு எதிராக அல்ல கொரோனா வைரஸிற்கு எதிராகவே நாம் நம்பிக்கையில்லா பிரேரனையை கொண்டுவர வேண்டும் என தெரிவித்ததோடு குறுகிய அரசியல் சுயநலத்தை விட்டு வெளியில் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
குறுகிய அரசியல் நலத்திட்டங்களுக்குள் சிறைப்பட வேண்டாம். வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டையும் மக்களையும் பாதுகாக்க செயற்படுவோம். இதற்கு தேவையான ஒத்துழைப்புகளை பேதங்களை மறந்து செயற்பட வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மறுபுறம் முஸ்லிம் தரப்புகள் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை தகனம் செய்யாது நல்லடக்கம் செய்ய வேண்டும் என்றவாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை கடுமையாக எதிர்த்துள்ள ஆளும் கட்சி உறுப்பினர்கள், இதனால் மக்கள் மத்தியில் அநாவசியமான பிரச்சினைகள் ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment