மனித உயிர்களை காப்பாற்ற முடியாது போன பாரளுமன்றத்தை கூட்டுவதில் அர்த்தம் என்னவுள்ளது - அமைச்சர் பந்துல - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

மனித உயிர்களை காப்பாற்ற முடியாது போன பாரளுமன்றத்தை கூட்டுவதில் அர்த்தம் என்னவுள்ளது - அமைச்சர் பந்துல

(ஆர்.யசி) 

எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு அமைய அரசியல் அமைப்பினை மீறி அரசாங்கத்தினால் தீர்மானம் எடுக்க முடியாது. யார் என்ன அழுத்தம் கொடுத்தாலும் பழைய பாராளுமன்றத்தை கூட்ட எந்த தீர்மானமும் இல்லை என்கிறது அரசாங்கம். பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோது பாராளுமன்றத்தை கூட்டுவது குறித்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போதே அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பாராளுமன்றத்தை கூட்டாது அரசியல் அமைப்பை மீறினால் அதற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டிவரும் என முன்னாள் நிதி, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கூறியுள்ளார். 

ஆனால் இந்த நாட்டு மக்களுக்காகவும், அவர்களினதும் நாட்டினதும் பாதுகாப்பிற்காக ஜனாதிபதியும், அமைச்சரவையில் அனைவரும் ஒரு தீர்மானம் எடுத்து அர்ப்பணிப்புடன் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவ்வாறு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டதற்காக ஜனாதிபதியும், அமைச்சரவையில் அனைவரும் சிறைக்கு செல்ல நேருமென்றால் அதனை ஏற்றுக்கொண்டு சிறைவாசம் செல்லவும் நாம் தயராகவே உள்ளோம். 

மங்கள சமரவீர என்பவர் இந்த நாட்டில் மக்களை காப்பாற்ற எமது இராணுவம் செய்த தியாகத்தையே போர் குற்றம் என கூறிக்கொண்டு ஜெனிவாவில் சென்று இராணுவத்தை தண்டிக்க நடவடிக்கை எடுத்த அமைச்சர் அவர். அப்போதைய ஜனாதிபதியின் கண்களில் மண்ணை தூவிவிட்டு சர்வதேச தரப்பிடம் இலங்கையை மண்டியிட நடவடிக்கை எடுத்தவரும் அவரேயாவார். 

மக்களை எமாற்றும் கருத்துக்களை கூறுவதும், அரச நிதி முறைகேடுகள் குறித்தும் அவருக்கு எதிராக நான் வழக்கொன்று தாக்கல் செய்து உயர் நீதிமன்றத்தில் இப்போதும் குறித்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகின்றது. 

இந்த குற்றச்சாட்டில் ஜனாதிபதி அரசியல் அமைப்பில் எந்தவொரு சரத்தையும் மீறி செயற்படவில்லை. அரசியல் அமைப்பு தெரியாது கோவத்தில் காரணிகளை கூறும் நபர்களுக்கு எம்மால் பதில் கூற முடியாது. நிதி விவகாரம் குறித்தே இவர்கள் கூறிக்கொண்டுள்ளனர், அரசியல் அமைப்பின் 150(3) சரத்தில் மிகத் தெளிவாக இதற்கான விளக்கம் கூறப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் கூடும் என தீர்மானிக்கப்பட்டு அடுத்த மூன்று மாதங்கள் வரையில் நாட்டின் நிதி விடயங்களை ஜனாதிபதியினால் கையாள முடியும். இந்த காரணிகளை தெளிவாக படிக்க வேண்டும். அதுமட்டும் அல்லாது ஜனாதிபதியினால் அவசரகால நிலைமையில் மட்டுமே பாராளுமன்றத்தை கூட்டி சட்டமொன்றை நிறைவேற்றிக் கொள்ள முடியும். பாராளுமன்றத்தை கூட்டும் எந்த நோக்கமும் இல்லையென ஜனாதிபதியே கூறிவிட்டார். 

கடந்த காலங்களில் இந்த பாராளுமன்றம் மூலம் நாட்டுக்கும் மக்களுக்கும் நடந்த நன்மைகள் ஒன்றுமில்லை என்பது மக்களுக்கு நனறாகவே தெரியும். 278 மனித உயிர்களை காப்பாற்ற முடியாது போன பாரளுமன்றத்தை கூட்டுவதில் அர்த்தம் என்னவுள்ளது. 

அரசியல் அமைப்பிற்கு அமையவே நாம் அனைவரும் செயற்பட வேண்டும். நாட்டிற்கு என உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தை மீறி செயப்பட ஏன் இவர்கள் எமக்கு அழுத்தம் கொடுகின்றனர் என்றே நாம் கேள்வி எழுப்ப வேண்டியுள்ளது்

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகளின் உறுப்பினர்களை சந்தித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அவர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்த கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்க பிரதமர் தீர்மானம் எடுத்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறும் என்றார். 

No comments:

Post a Comment