கடந்த காலங்களைப் போன்று அரசாங்கம் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றது - ஆட்சி அதிகாரங்களில் மோகம் கொண்டிருந்தால் மக்களின் நலனை பாதுகாப்பது கடினம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 30, 2020

கடந்த காலங்களைப் போன்று அரசாங்கம் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றது - ஆட்சி அதிகாரங்களில் மோகம் கொண்டிருந்தால் மக்களின் நலனை பாதுகாப்பது கடினம்

(செ.தேன்மொழி) 

கடந்த காலங்களில் போன்றே அரசாங்கம் நிதி மோசடியில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, அரசாங்கத்திற்கு துணைபோகும் நபர்களின் ஆலோசனைகளுக்கமையவே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் என்பது உறுதியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை வைரஸ் பரவல் தொடர்பில் அக்கறை கொள்ளாது தேர்தலில் வெற்றி கொள்வது தொடர்பிலே அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது கொவிட்-19 வைரஸ் தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தற்போது அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

இவ்வாறான நிலைமையில் நாட்டு மக்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதனை கருத்திற்கொண்டு செயற்படுவதாக எமக்கு தோன்றவில்லை. மாறாக அரசாங்கத்திற்கு துணைபோகும் தூரநோக்குச் சிந்தனையற்ற நபர்களின் ஆலோசனைக்கமையவே நாட்டின் ஜனாதிபதி செயற்படுகின்றார் என்பதை தெரிய வந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கும் செயற்பாடாகும்.

வைரஸ் பரவல் மத்தியில் தேர்தலை வைத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெற்றி கொள்வது தொடர்பிலே ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார். ஆட்சி அதிகாரங்களின் மீது மோகம் கொண்டிருந்தால் மக்களின் நலனை பாதுகாப்பது கடினமாகும்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றிருந்த போதும் மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்கி அரசாங்கத்திற்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுத்தோம். ஆனால் அதனை வைத்துக் கொண்டு அவர்கள் மக்களின் நலனுக்காக எந்தவித செயற்பாடுகளையும் முன்னெடுக்க வில்லை. தற்போது வைரஸ் பரவலுக்கு மத்தியில் தேர்தலில் வெற்றி கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்.

இதன் அடிப்படையிலேயே வைரஸ் தொற்று தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இரு வாரங்களுக்கு முன்னரே மே மாதம் 11 ஆம் திகதி பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை திறக்க முடியும் என்று அறிவித்தலை மேற்கொண்டுள்ளனர். இதனை அரசாங்கத்திற்கு துணைபோகும் சிலர் ஏற்றுக் கொண்டிருந்தாலும் எம்மால் ஏற்றுக் கொள்ளமுடியாது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நேரடியாக ஜனாதிபதிக்கு குறைகூறாவிட்டாலும் தமது ஆலோசனைகளுக்கமைய அரசாங்கம் செயற்பவில்லை என்பதை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் நாம் அவர்களுக்கு கௌரவத்தை தெரிவிக்க வேண்டும்.

கொரோனா பரவல் ஏற்பட்டு பாராளுமன்றம் களைக்கப்பட்டதையும் அடுத்து அரசாங்கத்திற்கு இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. கொரோனா வைலரஸ் பரவலினால் தொழிலுக்குச் செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காக அரசாங்கம் 5000 ரூபாவையை நிவாரணமாக வழங்கி வருகின்றது. இதனை பெற்றுக் கொள்வதற்கும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் இதுவரை கிடைக்க பெற்றுள்ள நிதியைக் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பணத்தை நிவாரணமாக பெற்றுக் கொடுக்க முடியும். இவ்வாறு செய்வதால் ஒரு மாத்திற்கு 40 பில்லியன் ரூபாவே செலவிடப்படும். நிதி மோசடிகள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு விசாரணைகள் மேதற்கொள்ளப்பட்டு வந்த நபரான கோத்தாபவை மக்கள் ஆட்சியாளனாக தெரிவு செய்துள்ளனர். இவ்வாறான ஒருவரது ஆட்சிக் காலத்தில் மீண்டும் நிதி மோசடிகள் இடம்பெறாது என்று கருதுபவர்கள் முட்டாள்களாவர். இவர்கள் யாதார்த்த நிலைமையை அறியாதே செயற்படுகின்றனர்.

மேலும் ஜனாதிபதி கோத்தாபய இராணுவ ஆட்சிக்கு வித்திடுவதைப் போன்றே செயற்படுகின்றார். நாட்டில் எந்தவித பயங்கரவாத செயற்பாடுகளும் இல்லாத நிலையில் இராணுவத்தினரை பொலிஸாரின் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தியுள்ளார். இதேவேளை அரச நிர்வாக பிரிவுகளுக்கு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளை நியமித்து வருகின்றார். கடந்த காலத்தில் இவர்களது ஆட்சியின் போது தேவையற்று இராணுவத்தினரை சேவையில் அமர்த்தியமையினால் பல இழப்புகளை எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டது. இந்த நிலைமை மேலும் ஏற்படக்கூடும். 

No comments:

Post a Comment