முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் வழக்கு காணொளி மூலமாக ஒத்தி வைக்கப்பட்டது! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் வழக்கு காணொளி மூலமாக ஒத்தி வைக்கப்பட்டது!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீதான வழக்கு எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு இன்றையதினம் இடம்பெற இருந்தது. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்கு தொடர்பாக நீதிபதியின் ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர சிறைச்சாலையில் இருந்து வழக்கு விசாரணையை மேற்கொள்ள ஏற்பாடுகளை செய்தார். 

இதன் பிரகாரம் இன்று வியாழக்கிழமை (02) காணொளி அழைப்பின் ஊடாக மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் தலைமையில் விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டு எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை வழக்கை ஒத்திவைத்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம். அப்துல்லா பதிவியேற்றதையடுத்து குறித்த வழக்கின் சாட்சியாளராக மேல் நீதிமன்ற நீதிபதி இருந்த காரணத்தால் குறித்த வழக்கிற்கு மட்டக்களப்பு குற்றவியல் சிவில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் சட்டமா அதிபர் திணைக்களத்தால் நியமிக்கப்பட்டதையடுத்து கடந்த மாதம் 17 ஆம் திகதி நீதிமன்றங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் அன்றையதினம் குறித்த வழக்கை மேல் நீதிமன்றத்தில் நீதிபதி டி.சூசைதாசன் விசேடமாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு ஓத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நிருபர் சரவணன்

No comments:

Post a Comment