நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும், அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் - சுஜீவ சேனசிங்க எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, April 2, 2020

நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும், அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் கலந்துரையாட வேண்டும் - சுஜீவ சேனசிங்க எச்சரிக்கை

(செ.தேன்மொழி) 

ஊரடங்கு தளர்த்தப்பட்டதை அடுத்து எதிர்நோக்க வேண்டி ஏற்படும் சவால்கள் தொடர்பில் அரசாங்கம் சிந்தித்துச் செயற்பட வேண்டும். இதுபோன்ற நெருக்கடியான நிலைமைகளின் போது எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பில் அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் கலந்துரையாடி சிறந்த முன்னாயத்தங்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் எதிர்வரும் தினங்களில் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க எச்சரித்துள்ளார். 

தற்போது தேர்தலைவிட மக்களதும் இந்நாட்டினதும் நலன் தொடர்பிலே கவனம் செலுத்த வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாப்பது எமது பொறுப்பாகும். கொரேனா தொற்று தொடர்பில் தற்போது ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டு பரவலை கட்டுப்படுத்தினாலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டதன் பின்னரும் தொற்று நீக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தொடர்ந்தும் கூறுகையில், தற்போது நாட்டில் வைரஸ் கிருமி பரவியுள்ளதால் இது சில தினங்களுக்கு தங்கியிருப்பதற்கான வாய்ப்பிருக்கின்றது. இவ்வாறான நிலையில் அது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க போதுமான கருவிகள் அரசாங்கத்திடம் இல்லை. இந்நிலையில் போதுமான கருவிகளை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். 

நாடு தற்போது பெரும் நெருக்கடியான நிலையில் இருக்கின்றது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களை கருத்திற் கொண்டு அரசாங்கம் மக்களுக்கு பல சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக அறிவித்திருந்தது. அதற்கமைய சலுகைப் பொதிகள், நிதி உதவிகள் மற்றும் கடன் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரையில் எதுவும் செயற்படுத்தப்படவில்லை. 

இதேவேளை, தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதால் நிதி திரட்டுவது தொடர்பிலும் சிக்கல் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தின் மீது நாங்கள் குற்றச் சுமத்தவில்லை, அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்படவே விரும்புகின்றோம். அதனாலேயே தொடர்ந்தும் இந்த நெருக்கடி நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்து வருகின்றோம். 

இந்நிலையில் தற்போது நாட்டிலுள்ள சிறந்த அனுபவம் மிக்க, பொருளாதார செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தினங்களில் நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் கலந்துரையாடி தற்போதே அது தொடர்பில் சிறந்த முகாமைத்துவ நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரம் தொடர்பிலும், கடன் செலுத்துதல் தொடர்பிலும் கலந்துரையாட வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment