(எம்.மனோசித்ரா)
மதத் தலைவர்களையும், கட்சித் தலைவர்களையும் அழைத்து பேசிக் கொண்டிருப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. யாருடன் எதைப் பேசினாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் மாத்திரமே நேரடியாக களத்தில் இறங்கி சேவையாற்ற முடியும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அத்தோடு தெரிவு செய்யப்பட்ட சில மக்களை தனிமைப்படுத்தல் அல்லது பாதுகாப்புப்படை வீரர்களை தங்க வைப்பதற்கு பாடசாலைகளை பயன்படுத்துவதற்கு பதிலாக மூடப்பட்டுள்ள ஹோட்டல்களை பயன்படுத்துமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை சவாலுக்குள்ளாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பம் முதலே வைரஸ் தொடர்பான பரிசோதனைகளை அதிகரிக்குமாறு ஐக்கிய தேசிய கட்சி வலியுறுத்தி வந்தது. எனினும் தற்போது ஓரளவு பரிசோதனைகளின் அளவு அதிகரிக்கப்பட்டிருந்தாலும் அதற்கேற்ப நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துச் செல்கிறது.
இந்நிலையில் நபரொருவர் தனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்று சந்தேகம் கொண்டால் அவர் அதற்கான பரிசோதனைகளைச் செய்து கொள்வதற்கு முறையான செயற்திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை.
தனியார் வைத்தியசாலைகளில் சென்று பரிசோதனைகள் முன்னெடுக்க முடியும் என்று கூறப்பட்டாலும் அங்கு பெருமளவான மக்கள் குழுமியிருக்கின்றனர். இவ்வாறு குழுமியிருக்கும் மக்கள் கூட்டத்தில் ஒருவருக்கேனும் வைரஸ் தொற்று காணப்பட்டால் அது பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
எனவே வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகம் கொள்பவர்களுக்காக சுகாதார அமைச்சினால் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும். அதன் மூலம் பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்களுக்கு நேரத்தை வழங்குதல் உள்ளிட்ட முறையான திட்டமிடப்பட்ட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது நாம் அரசாங்கத்திடம் முன்வைக்கும் யோசனையாகும்.
எதிர்வரும் நாட்களில் சில திணைக்களங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது சேவையில் ஈடுபடவுள்ள ஊழியர்கள் தாம் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளும் வகையிலான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவது பாதுகாப்பானதாகும்.
மேலும் ஏனைய நாடுகளைப் போன்றல்லாமல் அதிஷ்டவசமாக எமது நாட்டில் வைத்தியர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அவ்வாறு ஏற்படுமானால் அது பாரதூரமானதாகும். எனவே சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேலும் விஸ்தரிக்க வேண்டும்.
சில பிரதேசங்களைச் சேர்ந்த மக்களையும் பாதுகாப்புப்படை வீரர்களையும் தனிமைப்படுத்தல் அல்லது தங்க வைப்பதற்காக பாடசாலைகளை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது.
எதிர்வரும் வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால் அது மாணவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகும். எனவே இவற்றுக்கு பாடசாலைகளைப் பயன்படுத்துவை விட மூடப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு கொடுப்பனவுகளை வழங்கி அவற்றை பயன்படுத்த முடியும். இது பாதுகாப்பான வழிமுறையுமாகும்.
மத குருமார்களையும், கட்சித் தலைவர்களையும் அல்லது வேறு குழுவினரையும் அழைத்து பேசுவதால் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட முடியாது. இவ்வாறான தேசிய பிரச்சினையில் மக்கள் பிரதிநிதிகளால் மாத்திரமே நேரடியாக மக்களுக்காக சேவையாற்ற முடியும்.
எனவேதான் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு கோருகின்றோம். பாராளுமன்றம் கூட்டப்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நாம் எதனையும் செய்யப்போவதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தேர்தலை நடத்துவதில் தற்போது அரசாங்கம் மிகுந்த கவனம் செலுத்துகிறது. ஜனநாயக நாட்டில் தேர்தல் அத்தியாவசியமானதாகும். தேர்தலை நடத்துவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாடு முழுமையாக மீண்ட பின்னர் தேர்தலை நடத்துமாறு கோருகின்றோம். ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டிய அதேவேளை மக்களின் வாழ்க்கையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment