மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பளித்தமை தொடர்பான சகல ஆவணங்களையும் வெளிப்படுத்துமாறு கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 1, 2020

மிருசுவில் படுகொலையாளிக்கு பொதுமன்னிப்பளித்தமை தொடர்பான சகல ஆவணங்களையும் வெளிப்படுத்துமாறு கோரிக்கை

(ஆர்.ராம்) 

மிருசுவில் படுகொலை வழக்கின் முதல் எதிரியான சுனில் ரத்தநாயக்கவிற்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பு வழங்கியுள்ள நிலையில் அது தொடர்பான சகல ஆவணங்களையும் பகிரங்கப்படுத்துமாறு இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் கோரியுள்ளது. 

குறிப்பாக, வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கை, சட்டமா அதிபரின் ஆலோசனைகள், நீதி அமைச்சரின் பரிந்துரைகள் ஆகியவற்றை பகிரங்கப்படுத்துமாறும் அவ்வமைப்பு கோரியுள்ளது. 

இது தொடர்பில் அவ்வமைப்பு தெரிவித்துள்ளாவது, 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மிருசுவிலில் இடம்பெற்ற படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய வழக்குடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி செயலகத்திடம் கோருகின்றோம். 

அவ்வாறு பகிரங்கப்படுத்த தவறும் பட்சத்தில், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறையினரிடையே அதிகார வலுவேறாக்கம் தொடர்பாக ஈடுசெய்யமுடியாதளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதில் நாம் கரிசனை கொண்டுள்ளோம். 

குறிப்பாக இந்த வழக்கில் குற்றவாளி மற்றும் அவரின் தண்டனைகள் உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளான புவனேக அளுவிஹார, நிஹால் பெரேரா, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்த்தன மற்றும் மூர்டு பர்ணாந்து ஆகிய ஐவரடங்கிய குழுவினரால் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இது உறுதிப்படுத்தப்பட்டது. 

அரசியலமைப்பின் 34ஆவது பிரிவு எந்தவொரு குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கின்றது. எனினும், அதே பிரிவில் ‘எந்தவொரு நீதிமன்றத்தின் தண்டனையால் எந்தவொரு குற்றவாளியும் மரணத்திற்கு ஆளாக நேரிட்டால், வழக்கை விசாரணை செய்த நீதிபதியினால் ஜனாதிபதிக்கு ஒரு அறிக்கை வழங்கப்படுவதோடு, அந்த அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுடன் அதற்கு பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பப்படுவதோடு அமைச்சர் தனது பரிந்துரைகளுடன் அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்புவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் வர்த்தமானி அறிவித்தல் இல 2004/66 இல் அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிமுறைகள் 20/1/ஐஏ இற்கமைய சகல பொது அதிகார சபைகளும் ‘குறிப்பாக பொதுமக்களை பாதிக்கின்ற முடிவுகள் மற்றும் அவற்றின் முறையான செயல்களுக்கு அடிப்படையாக பயன்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தாமாக முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது என்றுள்ளது. 

இதேவேளை இந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர குறிப்பிடுகையில், ‘பொதுமன்னிப்புக்கான உரிய செயன்முறைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிடாமல் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தினைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கிய இரண்டு சந்தர்ப்பங்களை சமீபகால வரலாறுகளில் நாம் கண்டுள்ளோம். 

இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தினை நீதித்துறை செயற்பாடுகளில் பயன்படுத்துவதானது நீதித்துறையின் சுதந்திர செயற்பாட்டிற்கு பாதிப்பினை ஏற்படுத்துவதோடு, நீதித்துறை தொடர்பாக பொதுமக்களிடம் இருக்கும் நம்பிக்கையினையும் அது இழக்கச் செய்துவிடும். 

அண்மையில் இடம்பெற்ற இரண்டு நிகழ்வுகளுக்கும் ஜனாதிபதிகள் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பான ஆவணங்களை உடனடியாக பகிரங்கப்படுத்துவது அவசியமாகும். அவ்வாறு தகவல்களை பகிரங்கப்படுத்துவதனூடாக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்கஷ அரசின் தொழிநுட்ப நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அது முன்னிலைப்படுத்தும். 

அரசியலமைப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கையினையும் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் நீதி அமைச்சரின் பரிந்துரைகளையும் பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதி செயலாளர் பீ.பி. ஜயசுந்தரவைக் கோருகின்றோம் என்றார்.

No comments:

Post a Comment