(எம்.மனோசித்ரா)
தமது பாதுகாப்பிற்கான அடிப்படை வசதிகள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளுக்கு துரிதமாக தீர்வு வழங்கப்படாவிட்டால் இம்மாதம் 04 ஆம் திகதி முதல் கொரோனா வைரஸ் (கொவிட் 19) ஒழிப்பு தொடர்பான அனைத்து சேவைகளிலிருந்தும் விலக தீர்மானித்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் எம்.ஜீ.யு.ரோஹனவினால் இது தொடர்பில் நேற்று புதன்கிழமை சுகாதார அமைச்சின் செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி கால வரையரையின்றி தமது குடும்பம் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கை அவதான நிலையில் காணப்படுகின்ற போதிலும் தமது சேவையை ஆற்றி வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும்.
எவ்வாறிருப்பினும் இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற் கொள்ளாது சேவையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு சுகாதாரத் துறையினர் குறைந்த பட்ச ஏற்பாடுகளைக் கூட செய்து கொடுக்கவில்லை. எமது சேவையை சுகாதாரத் துறையினர் புரிந்து கொள்ளாமை கவலையளிக்கிறது.
எனவே பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தேவையான உரிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், சேவையில் ஈடுபடுவதற்கான போக்குவரத்து வசதிகள் செய்து கொடுத்தல், உணவு உள்ளிட்ட ஏனைய தேவைகளை நிறைவு செய்தல் மற்றும் அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்கப்படாவிட்டால் இம்மாதம் 4 ஆம் திகதியிலிருந்து அனைத்து பொது சுகாதார பரிசோதகர்களும் தமது பாதுகாப்பை கருத்திக் கொண்டு அனைத்து சேவைகளிலிருந்தும் முழுமையாக விலகிக் கொள்வர்.
No comments:
Post a Comment