(ரொபட் அன்டனி)
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். சிறந்த வேட்பாளர்களை களமிறக்குவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் என்று கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கின்றது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்கள் இம்மாதம் 12 ஆம் திகதியிலிருந்து 19 ஆம் திகதிவரை நடைபெறும்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் களமிறங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாம் தற்போது சிறந்த வேட்பாளர்களை தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம். சிறந்த வேட்பாளர்களை களமிறக்கி நாம் வெற்றி பெற வைப்போம். மக்கள் எமது தரப்பையே நம்புகின்றனர். எனவே நாங்கள் மீண்டும் மக்களின் நம்பிக்கையை பெறுவோம்.
கேள்வி: மாற்று அணி உருவாக்கம் தொடர்பில்
பதில்: மாற்று அணி ஒன்றும் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது. மக்கள் எம்மையே நம்புகின்றனர். எம்மீது நம்பிக்கை வைத்து மக்கள் எமக்கு ஆதரவளிப்பார்கள். நாம் அவ்வப்போது மாற்றமடைகின்ற சூழல்களுக்கு அமைவாக செயற்பட்டு வருகின்றோம்.
கேள்வி: வடக்கு, கிழக்கிற்கு வெளியே கூட்டமைப்பு போட்டியிடுமா?
பதில்: அவ்வாறு ஒரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. நாம் தேர்தலுக்கு சிறந்த முறையில் தயாராகி வருகின்றோம். எமது கொள்கைகள் தெளிவானவை. அவற்றை நாம் ஏற்கனவே மக்களிடம் முன்வைத்திருக்கின்றோம். மக்கள் எம்மீது நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள் என்றார்.
No comments:
Post a Comment